8.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகள் மட்டு.வாவியில் கைப்பற்றல்

எட்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் மட்டக்களப்பு வாவியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்ஸான் குரூஸ் தெரிவித்தார்.
இன்று காலையும் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மட்டக்களப்பு வாவியில் நாவலடி, முகத்துவாரம், பாமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் அமைச்சினால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இந் நடவடிக்கையின்போது சட்டவிரோத வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிவிட்ட நிலையில் அவர்கள் பாவித்த வலைகள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வலைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்ததர்.
தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகள், முக்கூட்டுவலைகள் உட்பட சிறிய கண்வலைகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வலைகளைக் கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் மட்டக்களப்பு வாவியில் சிறிய மீனினங்கள் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-ஜவ்பர்கான்-
Previous Post Next Post