முறையற்ற ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்து கண்டனப் பேரணி பொத்துவிலில் சம்பவம்

அக்கறைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை எவ்வித பதிலீடின்றியும் அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.முஹம்மட் காஸீம் அவர்கள் இடமாற்றம் வழங்கியமையைக் கண்டித்து 2017.10.25 புதன்கிழமை பொத்துவில் பொதுமக்களால் கண்டனப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
பொத்துவில் உப வலயத்திற்குட்பட்ட 21 பாடசாலைகளுக்கும் சுமார் 460 ஆசிரியர்கள் தேவையான போதும் 324 ஆசிரியர்கள் கடமையாற்றி வந்த வேளை 136 ஆசிரியர் வெற்றிடங்கள் கடந்த கால அரசியல் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களால் காணப்பட்டது. இவ்வேளை 39 ஆசிரியர்களை எவ்வித பதிலீடின்றியும் அக்கறைப்பற்று அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றி பொத்துவில் கோட்டத்தில் 175 வெற்றிடங்களை ஏற்படுத்தி பொத்துவில் மாணவர்களின் கல்வியை அதிகாரிகள் நிர்க்கதியாக்கியுள்ளனர் எனக் கூறிய குறித்த கண்டனப் பேரணி இடம்பெற்றது.

மேலும், இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பழைய பாடசாலைகளுக்கும் சமூகம் கொடுக்கும்படியும் குறித்த இடமாற்றம் இரத்துச் செய்யப்படுகின்றது எனவும் தற்போதைய அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தும் எந்த ஆசிரியர்களும் இதுவரை சமூகமளிக்கவில்லை.

வருடாந்த இடமாற்றங்கள் வருட ஆரம்பத்தில் வழங்கப்பட வேண்டிய வேளை பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பிக்கும் தருவாயில் இவ்வாறான இடமாற்றம் வழங்கியிருப்பது மாணவர்களின் கல்வியை கேள்விக் குறியாக்கியுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் 'ஆசிரியர்கள் இல்லாத பாடசாலை எதற்கு???', 'பொத்துவில் கல்வி பகடைக்காயா???', அழிக்காதே அழிக்காதே கல்வியை அழிக்காதே', 'கண்ணீரோடு மாணவர்கள் பன்னீர் தெளிக்கும் அதிகாரிகள்', 'நவீன கல்வியின் ஆசிரியர் பொத்துவிலுக்கு மட்டும் இல்லை???', 'மூன்றாந் தவணை வந்தால் ஆசிரியர்கள் இன்மை பொத்துவிலுக்கு மட்டும்', 'அழிக்காதே அழிக்காதே பொத்துவில் பாடசாலைகளை' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து பொத்துவில் பொதுச்சந்தை வழியாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த பெற்றோர்கள் நாங்கள் இந்த அமைதிப் பேரணியை மேற்கொண்டதிற்கான காரணம் எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்ட. ஏற்கனவே ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் எவ்வித பதிலீடிகள் இன்றி எங்களது குழந்தைகளின் கல்வியை நாசமாக்கும் சதித்திட்டத்தில் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். எங்களுக்கு இதற்கு உரிய தீர்வு இந்த நல்லாட்சி அரசில் கிடைக்காவிடின் பாடசாலைகளைப் பூட்டி உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தனர். இதே வேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டுக் கழகங்கள், அரச சார்பற்ற புத்திஜீவி அமைப்புக்கள், சமூக நலன் விரும்பிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post