தம்பலகாமம் “கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயவளாகத்தின்”; “பசுமைத் திட்டம் - கட்டம் 2” நிறைவேற்றம்

தம்பலகாமம் எல்லையில் அமைந்திருக்கும் பழம்பெரும் “கப்பல்துறை கண்ணகி அம்மன்” ஆலயவளாகத்தில் இரண்டாம் கட்ட “பசுமைத் திட்டம்” அதன் நிர்வாகத்தினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, ஆலயநிர்வாகத்தினரின் அழைப்புக்கிணங்க, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. ஜெ. ஜனார்த்தனன் தலைமையிலான சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் கடந்த பௌர்ணமி தினமாகிய கடந்த திங்கள் அன்று சுற்றியிருந்த பெருவெள்ளம், சீரற்ற பாதையூடான சிரமத்தையும் பாராது, மாட்டுவண்டில் மூலமாக அவற்றைக் கடந்துசென்று வனஇலாகாவிடமிருந்து இலவசமாகவும், பணம்செலுத்தியும் பெறப்பெற்ற பல எண்ணிக்கையிலான வனக்கன்றுகளான பாலை, புளியை, வீரை, வில்வம், வேம்பு, விளா, திருக்கொன்றை ஆகியவற்றுடன், எழுநூறுக்கும் மேற்பட்ட பனம்விதைகளையும் சிரமதானத்தின் மூலம் ஆலயவளாகத்தை துப்புரவுசெய்து நடுகையிட்டனர். 

முத்துநகர் பாதையூடாக சுமார் 08 கி.மீ. தூரம் கால்நடையாகவும், மாட்டுவண்டில் மூலமும் கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பயணித்த கிழக்குமாகாணசபை உறுப்பினர், திரு. ஜனார்த்தனன் அவர்கள் பாதையின் மோசமான நிலைமையை நேரடியாக அறிந்து கொண்டார்.
காடுகள் அழிக்கப்பட்டுவரும் இன்றைய காலகட்டத்தில், ஆலயவளாகத்திலும் அதனை அண்டிய பகுதியிலும் அழிந்துபோன இயற்கைவளத்தினை மீண்டும் உயிர்ப்பிக்க தொடர்ந்து பாடுபட்டுவரும் ஆலயநிர்வாகத்தினரை வெகுவாகப் பாராட்டிய மாகாணசபை உறுப்பினர், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகஅவசியமான இத்தகைய திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி, அவர்களின் இத்தைகைய முயற்சிக்கு தனது ஆதரவு தொடர்ந்திருக்கும் என உறுதி கூறினார். 

300 வருடகால தொன்மையான கப்பல்துறை கண்ணகிஅம்மன் ஆலயத்தை அழியவிடாமல் பேணிக்காத்துவரும் தம்பலகாமம் மக்களின் உறுதியை வியந்து பாராட்டிய அவர், ஆலயத்தின் அவசிய, உடனடி தேவைகளை நிர்வாகக்குழு தலைவர் திரு. பொ. பற்குணராசாவிடம் விபரமாகக் கேட்டறிந்து அதற்கான இயன்ற உதவிகளை தாம் பெற்றுத்தருவதாக அவர்pடம் உறுதிமொழி கூறி, தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தை பரம்பரையாக தக்கவைத்துக் காத்து அதனை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது தம்பலகாமம் மக்களின் பாhரிய கடமையாகும் என்னும் தனது கருத்தினை ஆலயவளாக சிரமதான முடிவுநிகழ்வில் வலியுறுத்தினார். 
கப்பல்துறை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் “பசுமைத் திட்டம் - கட்டம் 1” கடந்த பௌர்ணமி தினமாகிய 25.11.2015அன்று ஆலயநிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது.  
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post