திருகோணமலை மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குள் சமூக சேவையில் ஈடுபடும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும், மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பின்பு சமூக சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு கிண்ணியா பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,  கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குள் இயங்கிவரும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (08) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

'கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குள் சமூக சேவையில் ஈடுபடும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் திருகோணமலை மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பின்பே சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்றிருப்பின், அதன் பிரதி ஒன்றை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்குமாறும் இந்த அனுமதி இது வரை பெறப்பாதிருப்பின், நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கான அனுமதியை உடனடி யாக பெற்றுக்கொள்ளுமாறும் அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்த பிரதேச செயலக எல்லைக்குள் சேவை வழங்கும் வேலைத்திட்டத்துக்கான அனுமதியை பெற்ற பின்னரும், நிறுவனங்களின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்குமான பயனாளிகளை செயலகத்திடமிருந்து பெற்றே, அவர்களுக்கான சேவையை வழங்கவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிலருக்கு மாத்திரம் சேவை வழங்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன், ஏனைய பயனாளிகளுக்கும் இந்த சேவை கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது ஒவ்வொரு சமூக வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்னர், செயலகத்தினூடாக  மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும் என்றும் இது தவிர மாவட்டச் செயலாளரின் அனுமதியின்றியோ அல்லது பிரதேச செயலக அனுமதியின்றியோ பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு நேரடியாக நிறுவனத்தினால் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதனை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-எப்.முபாரக்-
Previous Post Next Post