இலங்கையரால் அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேஷிய விமானம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிகுண்டு பீதி காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மெல்போர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதாக மலேஷிய போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அப்துல் அசீஸ் பின் கப்ராவி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசீஸ் தெரிவித்ததாவது, இது ஒரு விமான கடத்தல் முயற்சி இல்லை. பயணி ஒருவர், விமானிகளுக்கு இடைஞ்சல் அளிக்கும் விதமாக விமானிகளின் அறைக்குள் நுழைய எத்தனித்திருக்கிறார்.

இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான சேவகர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதால் இலங்கை பயணியை மெல்போர்ன் பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றபடி பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் ஆசீஸ் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post