வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சாதனை - நிரூபித்திருக்கின்றோம்!

ஒரு வஞ்சிக்கப்பட்ட சமூதாயம் தமக்கான உரிமைகள் மழுங்கடிக்கப்படுகின்ற போதும் கூட இருப்பதைக்கொண்டு அளப்பறிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது என்றால் அது சாதனை என்பதையும் தாண்டி வேறானது.
பொத்துவில் பிரதேச க.பொ.த. சா/த முடிவுகள் சிலருக்கு கன்னத்தில் அறைந்து நிதர்சனத்தை நிரூபித்திருக்கிறது! எமது ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி வலயத்திற்கான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் எல்லாம் சுயநலங்களால் நொறுக்கப்பட்ட போதும் இன்னும் எங்களிடம் சக்தி இருக்கிறது, நாங்கள் சளைத்து விடவில்லை என்பதே நிரூபித்திருக்கிறோம்.

ஒரு சமூக கட்டமைப்பிற்கு அடிப்படை உரிமையே கல்வி உரிமைதான். அந்த அடிப்படை உரிமைக்கான போராட்டங்களில் ஒன்றாகத்தான் பொத்துவிலுக்கான தனிக் கல்வி  வலயக் கோரிக்கை பல தசாப்தங்களாக விடுக்கப்பட்டு வந்தது, வருகிறது!

அரசியல் சித்து விளையாட்டுக்களால் சிதையுண்டு அடிப்படை உரிமையை வென்றெடுக்கக்கூட குத்துக்கறனம் அடிக்க வேண்டும் என்று சாத்வீக போராட்டங்களையெல்லாம் மேற்கொண்டு ஏறாத படிகள் எல்லாம் ஏறி இறங்கி கடைசியில் அலுத்துப்போய் இருக்கிறோம். இத்தனைக்கும் இது ஒரு சாதாரண கல்வி வலய போராட்டம்.

ஒரே இரவுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலை பல வலய உருவாக்கங்கள் கூட இதற்கு மிகப்பெரும் சான்று.

ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது! ஆசிரியர்களையாவது நியமித்து தாருங்கள் என்று மன்றாடினோம், மண்ணுக்குள் புதையுன்டு போனது சமூக தர்மமெல்லாம் அப்போது.

இருக்கும்ஆசிரியர்களை கொண்டே இருப்பதையாவது செய்வோம் என்று விட்டுத்தான் மடித்துக்கட்டி களத்தில் இறங்கினோம், அல்லாஹ் அதற்கு மகத்தான வெற்றியை தந்திருக்கிறான்!

ஆம் பல்வேறு 9A கள் 8B என்று எடுத்திருக்கிறார்கள் மாணவர்கள்!

வகுப்பு நிறைய மாணவர்கள்! 
பத்தடி அங்குல பென்னம் பெரிய கரும்பலகை! 
எழுத வெண்கட்டி! 
படிக்க திறைமைமிகு மாணவர்கள்! 
பாடம் சொல்லித்தரத்தான் ஆசிரியர்கள் இல்லை!

இது தான் எங்கள் நிலை!
ஓரவஞ்சனையோடு பார்க்கப்படுகிறோம்!

பல தடவைகள் வலயம் தருவதாக இமாலயம் கட்டி ஆசை வார்த்தை காட்டிவிட்டு அடுத்த களக்ஸனுக்கு பறந்தவர்கள் ஏராளம்!

ஆனால் ஒன்று என்னதான் அநியாய விதைகள் ஆழத்தூவப்பட்டாலும் பொத்துவில் தாய் நிறையவே ஆளுமைகளை பிரசவித்திருக்கிறாள்!

தேர்தல்கால பச்சத்தண்ணி வாக்குறுதிகளுக்காகவும் தங்கள் ஸ்தானங்களை பாதுகாப்பதற்காகவும் பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையும் கல்வி வலய கோரிக்கையும் நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீரின்றி சிதைவுற்று இருக்கும் எங்களுக்கான கல்வியுரிமையைக் கூட பெற்றுத்தர முடியாத தலமைகள் எல்லாம் எங்களை துதி பாடுதல்களுக்கும் குரங்கு வித்தை காட்டி குழிபறிக்கவுமே நன்கு பயன்படுத்த நாடுகிறார்கள்.

தங்கள் உள்வீட்டு முரண்பாடுகளை தீர்ப்பதற்காகவும் குறுங்கால இலக்குகளை அடையவும் எங்களை நாடி வந்து நாடகமாடுகிறார்கள். இத்தனை ஏமாற்று சதிவலைகளுக்கும் மத்தியில்  இருப்பதை கொண்டு சாதனைப் பெறுபேறுகள் நாங்கள் பெற்றிருக்கிறோம். இத்தனை பெரிய உலக மகா யுத்தமே நடந்து முடிந்த பின் பெற்ற பெபேறுகளால் யார் யாரோ எல்லாம் பெருமை பெற்றுக் கொண்டு போகின்றனர்.

நல்ல பெறுபேறு வரும் வரை பொறிச்ச மீனை பூனை பார்ப்பதை போல் இருந்துவிட்டு இன்று பதிவு வைக்க முற்படுகின்ற அரசாங்க சீல் பொறிக்கப்பட்ட எடுபிடி தலைகளை எண்ணுகின்ற போது காமடியாய் இருக்கிறது. எங்கள் கல்வி உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைதிப்புரட்சியை இன்று நம் மாணவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்!

சதிகாரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சதிகாரன் அல்லாஹ்!

ஒன்று மட்டும்; எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது!

என்றோ ஒருநாள் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்திற்கான கதவை பாரிய சத்தத்துடன் திறப்போம்!


-ஆக்கம் : சல்மான் லாபீர்-
Previous Post Next Post