ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் இலங்கைவாழ் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்க வேண்டும் கிழக்கு முதல்வர் தெரிவிப்பு.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை வாழ் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்க வேண்டும். அதன் மூலம் பாராளுமன்றத்தில் முஸ்லீம்களின் குறைகள், தேவைகள் எடுத்தியம்பப் படவேண்டும்,

சமூகத்துக்கான ஒரே குரலாக இருக்கவேண்டும் என்ற நன்நோக்கத்திலேயே  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அன்று ஆரம்பித்தார்.

இன்று புதன்கிழமை(27) காலை முதலமைச்சரின் கொழும்புக் காரியாலத்தில் நடைபெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:
கட்சியின் விரிவாக்கம், மக்கள் கட்சியுடன் கொண்டிருக்கும் பற்று, அதன் வளர்ச்சி போன்றவை சிலருக்கு எரிச்சலூட்டுவதாகவே இன்றைய அவர்களின் இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

எனவே இப்படியான விசமப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடமாட்டாது. சிலர் இரகசியமாக கட்சிக்குள்ளே இருந்து கொண்டு தலைவருக்கும் கட்சிக்கும் எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகப் புரிகின்றது.

இன்று கிழக்கிற்கு தலைமை வேண்டும், கட்சியின் தலைவர் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். மக்களறியாத சிலருடைய கிழக்கின் எழுச்சி போன்ற சில்லறைத்தனமான அறிக்கைகளும் விசமப் பிரச்சாரங்களுமே இது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. எனவே மக்கள் கட்சியுடனும் தலையுடனும் உறுதியாக இருக்கின்றனர்.

ஆகவே இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் மக்களுக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்குரலாகவும், நல்லெண்ணத்தைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கட்சியை வழி நடாத்த சிறந்த தலைவராக இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் இருந்து கொண்டிருக்கிறார். எனவே அனைவரும் ஒன்று பட்டு நம்சமூகத்தின் தேவைகளை ஒருமித்த குரலில் கேட்டுப் பெற்று நம் மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் முன்னிற்க்க வேண்டுமே தவிர ஒவ்வொருவரும் பதவிகளுக்காகப் பிரிந்து சென்று தேசியத் தலைவர்களாகவும், செயலாளர் நாயகங்களாகவும் தங்களுக்குத் தாங்களே நாமங்களைச் சூடி மக்களை திசை திருப்ப நினைப்பதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே புல்லுருவிகளாக கட்சிக்குள் இருக்கும் சிலர் விரைவில் திருந்தி தலைமைக்குக் கட்டுப் பட்டு கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று தெரிவித்தார்

--  எப்.முபாரக்--
Previous Post Next Post