சினிமாவால் சீரழியும் இளசுகள்

காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறிவருவது தவிர்க்க இயலாத ஒன்றே! அதே நேரம் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி நவீனமயமான உபகரணங்களை நாம் தவறாகப் பயன்படுத்தும் போது சிதைந்து ஒழிந்து போவது நம் வாழ்வின் நிம்மதியும், மகிழ்ச்சியும்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
நவீன காலத்தின் கண்டிபிடிப்புக்களில் செல்ஃபோன் என்பது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்றாக மாறி விட்டது. அதன் பயன்பாட்டிலிருந்து ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைத்த போதிலும் அதைக் கையாளும் விதத்தில் உள்ள சில தவறுகளால் விபரீதங்கள் விளையும் தளமாக அமைந்து கைபேசி நமக்கு கைசேதமாய் கை வீசி கை விட்டுப்போகும் கட்டாயத்திற்கு ஆளாகின்றோம். மாட்டின் கழுத்தில் பெல் தொங்கும், இப்போ மனுஷன் கழுத்தில் செல் தொங்குது என யாரோ ஒருவர் கூறியது முற்றிலும் உண்மை என்றாகி விட்டது.

கலாச்சார சீரழிவு மிகுந்து வரும் இக் காலத்தில் கைபேசி ஓர் கூரிய முனை கொண்ட கத்தியைப் போன்றது. நம் இளைய சமுதாயத்தினரின் மனதையும் உணர்வுகளையும் அது குத்திக் கிழிக்காமல் கவனமாகக் கையாளச் செய்வதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. வியாபார ரீதியில் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வெல்ல வாடிக்கையாளர்களுக்கு வித விதமான சலுகைகளையும், அலங்காரத் திட்டங்களையும் அள்ளி வீசி அவர்களைத் தம் பக்கம் சாய்த்து வருகின்றன. ஆயிரம் குறுஞ்செய்திகள் முதல் ஐயாயிரம் வரை சொற்ப தொகைக்கு பேக்கேஜ் மூலம் வாரி வழங்குகின்றன. இதில் லவ்வர் பேக், ஃபேமிலி பேக், ஸ்டூடண்ட் பேக், செல் டூ செல் ஃப்ரீ டாக் டைம், குழு சார்ந்த இணைப்புகள் இப்படி எத்தனையோ கவர்ச்சிகரமான திட்டங்கள். இதில் அடிமாடுகளாக அகப்பட்டுக்கொண்டு ஆந்தைபோல் விழிக்கும் மக்கள் கூட்டம் தான் பரிதாபத்திற்குரியவர்கள்!

லேண்ட் லைன் எனப்படும் தரை வழி தொலைப்பேசி வீட்டில் எல்லோரும் பார்க்கும் விதம், பேச்சைக் கேட்கும் விதத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதில் இரகசியமாகப் பேசவோ, மறு முனையில் உள்ளவரிடம் தனிமையில் உறவாடவோ இயலாது. வீட்டில் உள்ளவர்கள் கேட்கக் கூடும் எனும் அச்சமும், கூச்சமும் நம் இளசுகளிடம், பெரிசுகளிடமும் உண்டாகும்.

செல்ஃபோன் எனும் சாத்தானின் உதவியால் யாரும் கண்காணிக்க இயலாத இடங்களில் இருந்து கொண்டே சைலண்டில் போட்டுக் கொண்டு ஆயிரம் எஸ்.எம்.எஸ்க்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனையில் உள்ளவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதில் இண்டர்நெட் பேக்கேஜ் நான்கு ரூபாய்க்கும், ஏழு ரூபாய்க்கும் சுலபமாகக் கிடைப்பதால் இளவட்டங்கள் என்ன வேண்டுமானாலும் டவுண்லோடு செய்து பார்த்துக்கொள்ளும் அபாயகரம். ஃபேஸ் புக் இல்லாத ஃபேஸ்களே இல்லை எனும் அளவிற்கு உலகலாவிய தொடர்புகள் வேறு. பள்ளிக்கூடத் தோழிகள், நண்பர்கள் எனும் வட்டத்தில் துவங்கி பாட சந்தேகங்களைப் பரிமாறுகின்றோம் என்று செல்லும் கையுமாக அலையும் சின்னஞ்சிறுசுகள் நாளடைவில் தோழியின் அண்ணன், தம்பிதானே? எனப் புதிய தொடர்புகளுக்கு உட்பட்டு காலப்போக்கில் அவர்களுடன் கைபேசியில் நேரடித் தொடர்புகள் செய்யத்துவங்கி விடும் மாபெரும் ஆபத்தும் உள்ளது.

பெற்றோர்களோ தம் பிள்ளை ஒழுக்கமானவள் எனக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இதைக் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் வாயும் வயிறுமாகப் பள்ளிக்குச் சென்ற பிள்ளை தன் முன் வந்து நிற்கும் போது, மகளின் நிலை கண்டு நொறுங்கிப் போகின்றனர். இது உண்மை! இன்னும் சில இளவட்டங்கள் சீரழிந்து சின்னபின்னமாகக் காரணமாவதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மாப்பிள்ளை-பெண் என பேசி முடிவு செய்தபின் உடனேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதில்லை. மாறாக பையன் வெளிநாட்டில் இருக்கின்றான், வெளியூரில் இருக்கின்றான் பெண்ணுக்கு இன்னும் வீடு கட்டவில்லை எனக் கூறி பெரும் பாலும் ஓரிரு வருடங்கள் கழித்து தான் திருமணங்கள் நடக்கின்றது.

இதற்கிடையில் மணமகனின் சகோதரி அல்லது மணப் பெண்ணின் தோழிமார்கள் மூலம் செல்ஃபோன் நம்பர்கள் பரிமாறப்படுகின்றது. சின்னஞ்சிறுசுகள் வாலிபப் பருவத்தின் தாக்கமும், ஏக்கமும் எதிபார்ப்புகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுடன் நாள் முழுக்க மணிக்கணக்கில் பேசியும் ஃபேஸ் புக்கில், ஆன்லைனில் வீடியோ சாட்டிங்கில் மூழ்கி தங்களின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெற்றோர்களோ தன் மகள் நம்பிக்கைக்குரியவள், நாணயமானவள் , நல்ல பிள்ளை என கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து இதைக் கண்டு கொள்வதேயில்லை.

சரி இதை கண்டித்து யாராவது எடுத்துக் கூறினால், என் பிள்ளை வேறெ யார் கிட்டயுமா பேசுறா? எங்க வீட்டு வருங்கால மருமகனோடுதானே பேசுறா? எங்களுக்குத் தெரியும்! நீங்க சும்மா இருங்க! நம்ம காலம் வேறெ இந்தக் காலம் வேறெ, என சப்பைக்கட்டி தன் மகள் நாசமாகப் போவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விடுகின்றனர். இவர்களும் தங்கள் சகட்டு மேனிக்கு சல்லாபத்தில் தள்ளாடி சுய நினைவு, சுறுசுறுப்பு, இழந்து எப்போதும் ஒருவித ஏக்கத்துடன் ஒருவித மயக்கத்திலேயே இருந்து வருவார்கள்.

இன்னும் சில தோழிமார்கள் தங்கள் வீட்டிற்கு மணமகனை அழைத்து இவளோடு தனிமையில் பேசும் வாய்ப்பபையும், இருவரும் சேர்ந்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர். இது பெற்றொர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை! இதிலும் கொடுமை தனக்குப் பேசிவைத்த மணமகன் தன் கூட்டாளிகளையும் (ஆன்லைனில்) இண்டர்நெட் மூலம் இவளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றான். ஃபேஸ்புக்கின் வசதியால் நாளடைவில் பேசி வைத்தவனை கழற்றி விட்டுவிட்டு அவனது கூட்டாளியைக் காதலித்து அவனையே மணம் முடிப்பேன் என அடம் பிடித்து அசிங்கப் பட்டு அல்லோலப் பட்டு திண்டாடும் குடும்பங்கள் பல.

சரி, இந்த ஓரிரு வருட இடைவெளியில் பையனின் பாசாங்கு வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மனதளவில் தன் கற்பையும் வாய் மொழி வார்த்தைகளையும் அவனிடம் அர்ப்பணித்து விட்டு, ஏதோ ஒரு சில காரணங்களால் திருமண பந்தம் மணம் முடிக்கும் முன்பே முறிந்து விட்டால்....? பெற்றோர்களே! சிந்தித்துப் பாருங்கள்....!!!

அவனுக்கென்ன? அவனை மணந்து கொள்ள ஆயிரம் அழகான பெண்கள் அணி வகுத்து நிற்பார்கள். ஆனால் இவளுக்குத்தான் இன்னல்களும், இழப்புக்களும். தன் மகள் நிலை தடுமாறி அழுது வடித்து அவனைத் தவிர வேறொருவனைக் கனவில் கூட எண்ணிப் பார்க்க இயலாமல் தன் நிலை மறந்து, தாய் தந்தையரை வெறுத்து எப்போதும் அழுகை, சோகம் என மன நோய்க்கு ஆளாக்கப்படுவதைக் கண்டு பெற்றோர்கள் மனம் குமுறுவதை நாம் பல இடங்களில் இன்றும் காண்கின்றோம். தன் மகள் அவனிடம் தனிமையில் பேசுவதை அன்றே தடுத்திருந்தால் அவளுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காதே? என இப்போது தலையில் அடித்துக் கொள்வதில் என்ன பயன்?

ஆகவே, அருமை பெற்றோர்களே...!!! இன்று முதல்,

  •  நம் இளைய சமுதாயத்தினரின் முதல் எதிரியான இந்த செல்ஃபோன் ஷெய்த்தானுக்கு(சாத்தானுக்கு) கல்லெறிந்து தன் வாரிசுகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முன் வாருங்கள்...
  • தங்கள பிள்ளைகளுக்கு செல்ஃபோன் தரும் போது அடிக்கடி அதை பரிசோதித்து யார்? யாரிடம் எவ்வளவு நேரம் பேசியுள்ளானர்? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்...
  •  நீண்ட நேரம் பிள்ளைகள் பாத்ரூம் மற்றும் கழிப்பறைக்குள் இருந்தால் தொடர்ந்து குரல் கொடுத்து அழையுங்கள்.கூடுமான வரை பிள்ளைகள் தனிமையில் (அது தோழியாகவே இருக்கட்டும்) பேசுவதை அனுமதிக்க வேண்டாம்...
  • பிள்ளைகளுக்கு உலகக் கல்வியை மட்டும் இன்றி மார்க்க கல்வியையும், பெருமானாரின் வாழ்க்கை வரலாறு, சஹாபாக்கள் வாழ்ந்த விதம், முன்னோர்களின் தியாகம், ஒழுக்க மாண்புகள் யாவையும் போதிக்க முன் வாருங்கள்...
  •  ஏனோ? தானோ? என வாழ்ந்து, தாமும் வீழ்ந்து, வளரும் சமுதாயத்தையும் படு குழியில் வீழ்த்தாமல் பண்பாட்டுச் சிந்தனையின் படிக்கட்டுகளில் கரம்பிடித்து இச்சமுதாயத்தை முனேற்ற பாடுபடுங்கள்...


அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

-JEEZAN AZEER-
Previous Post Next Post