அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நிரந்தரமான புதிய செயலாளரை நியமிக்குமாறு கோரிக்கை

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நிரந்தரமான புதிய செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக சிறப்பாகக் கடமையாற்றிய புவனேந்திரன் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஓய்வு பெற்றுச் சென்றதனால் செயலாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. இந்த வெற்றிடத்தை நிரந்தரமான செயலாளரைக் கொண்டு நிரப்பாமல் பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றும் செயலாளர் அவர்களை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் பதில் செயலாளர் நியமிக்கப்பட்டதால் பொதுமக்களும், பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.அத்தோடு பதில் செயலாளரின் சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாக செயற்பாட்டில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கடமையாற்றி வருகின்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நிதி உதவியாளர் போன்றவர்களின் செயற்பாட்டில் தடைகளை ஏற்படுத்தியதுடன் அவர்களை மனதளவில் பாதிப்படையச் செய்துள்ளார்.

அதுமட்டுமல்ல தனக்கு விருப்பமான உத்தியோகத்தர்களுக்கு மட்டும் சலுகைகளையும்,வரப்பிரசாதங்களையும் வழங்கி சபையின் செயற்பாடுகளை பிழையான வழிக்கு இட்டுச் சென்றுள்ளார்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் இவர் சபையின் செயலாளராகக் கடமையாற்றுவதால் ஏனைய நாட்களில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தி்ற்கு கடமைக்கு வராததோடு, காரியாலய நேரம் முடிவதற்கு முன்னரே சபையை விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சபைக்கு தேவை நிமித்தம் வருகின்ற பொதுமக்கள் குறித்த உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாத நிலையில் திரும்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உள்ளது.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்போது தனக்கு தெரிந்த நபர்களின் கோரிக்கைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கி செயற்படுகின்ற ஒரு தன்மையும் பதில் செயலாளரின் போக்கில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அண்மையில் பாதைகளை புணரமைக்கும் விடயத்தில் ஒரு கட்சியின் அமைப்பாளருக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டுள்ளார். இதனை அறிந்த மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் செயலாளருடன் தொடர்பு கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் விருப்பங்களை கருத்தில் கொள்ளாது அடிக்கடி கூட்டங்களில் அரசியல்வாதிகளைப் பற்றி பிழையான கருத்துக்களையும், அட்டாளைச்சேனை பிரதேசம் என்றால் பிரச்சினைக்குரிய பிரதேசம் என்றும் கூறிவருகின்றார். இவ்வாறு செயலாளருக்குரிய ஆளுமையும், பண்பும் இல்லாமல் செயற்படும் பதில் செயலாளருக்குப் பதிலாக புதிய ஒருவரை நிரந்தர செயலாளராக நிமியக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-றியாஸ்-
Previous Post Next Post