வரலாறு சரியாக மீட்கப்படுவதாயின் எமது எதிர்கால வாழ்வியலும் உறுதியாகும்-கனகசபை தேவகடாட்சம் தெரிவிப்பு.

தமிழ் உலக இலக்கிய வரலாற்றில் முதூர் மண்ணின் இலக்கிய சேவையின் பிதாமகனாக அறியப்படுபவர் வ.அ.இராசரெத்தினம் ஆகும். இருப்பினும் சீறாப்புராணத்திற்கு (நபிகள் நாயகத்தின் வாழ்க்கை) தமிழில் விளக்கவுரை எழுதிய விற்பன்னர்களில் மூதூரை சொந்த இடமாகக் கொண்ட உமர் நைனார் எழுதிய விளக்கவுரையே அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இஸ்லாமிய இலக்கிய பாடத்திட்டத்தில் (அ) உட்சேர்க்கப்பட்டதும், இம்மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஆவணவுமாகும்.
     
1961 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப் பின்னர் இலக்கிய தளத்தில் முத்திரை பதித்தவர்; காலஞ் சென்ற முதூர் முதல்வர், அமைச்சர் அப்துல் மஜீத்தாகும். அவரின் மறைவிற்குப் பின்னர் தொடங்கி இன்றுவரை அத்தளம் வெற்றிடமாகவே உள்ளது. முதூர் இஸ்லாமிய இலக்கியவாதிகளை தமிழ்மொழி காவலர்களாகவே கருத வேண்டும். தமிழுக்கு அவர்கள் ஆற்றும் தொண்டு இலகுவானதாக மதிப்பிட முடியாது என எழுத்தாளர் கனகசபை – தேவகடாட்சம் கடந்த ஞாயிறு 29.05.2016 அன்று முதூர் அனஸ் அவர்களின் ஒன்பது நூல்கள் இலவச வெளியீட்டு நிகழ்வின்போது தெரிவித்தார்.

இந் நிகழ்வு முதூர் பெரியபாலம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு இலக்கியவாதி மூதூர் முகைதீன் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீது அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  

தொடர்ந்து தேவகடாட்சம் கூறும்போது கசப்பான சம்பவங்களை அனைவரும் மறந்து தமிழ் இலக்கிய தளத்தில் நின்று ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் பிரச்சனைகள் வர இடமில்லை. தமிழ்மொழியை நிறைவாகக் கற்று இன்று தமிழில் இலக்கியம் படைக்கின்ற முஸ்லிம்களும் தமிழர்களே. எந்த மொழியில் நிற்கின்றோமோ அந்த மொழிதான் தாய்மொழி. எனவே முதூர் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்தான். ஆதலால் யார் விரும்பினார்களோ இல்லையோ நாமெல்லாம் தமிழ் மக்களே. இது பேரினவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்குமென்பதில் ஐயமில்லை என்றார்.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post