இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் திருகோணமலையில் இரா.சம்பந்தன்

இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுடன், இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, தென்னவன் மரபு அடிக் கிராமத்தில் சமூக மண்டபத்தை கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) பகல் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்தத் தருணத்தில் மக்கள் நிதானமாக இருக்க வேண்டும். மக்களைக் குழப்பவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தீயசக்திகள்   எமது மக்களைக் குழப்பி அதன் மூலம் அரசியல் தீர்வைத் தடுக்கலாம். எனவே, நாட்டின் அரசியல் தீர்வுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

'இந்த நாட்டில் ஏற்பட வேண்டிய அரசியல் தீர்வின் அவசியம் வெறுமனே தமிழ் மக்களுக்கு மாத்திரம் முக்கியமானது அல்ல. அது இந்த நாடு தற்போதுள்ள நிலைமையிலிருந்து மீளவும் கடன் சுமையிலிருந்து மீளவும்; அபிவிருத்திக்கும் முக்கியமானதாகும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாது, தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமல்லாது ஏனைய அனைத்து மக்களுக்கும் தற்போது மிக முக்கியமானதாக அரசியல் தீர்வு உள்ளது. இந்த அரசியல் தீர்வு கிடைத்தால், இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் உட்பட கடன் உதவிகளும் ஏனைய பல்வேறு அபிவிருத்திகளும்  கிடைக்கும். இதன் மூலம் நாடு முன்னேற்றம் அடையும். எனவே, நாட்டுக்கு அரசியல் தீர்வு என்பது தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.

இவ்வாறான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமாயின், நாட்டில் தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான முன்னேற்றமான சூழ்நிலையும்  ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று அரசியல் சாசன அவையாக மாறியுள்ளது. அதற்காக ஒரு குழுவையுவம் அமைத்துள்ளனர். அதில் எமது கட்சியும் உள்வாங்கப்பட்டுள்ளது' என்றார்.

'யுத்தப் பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் சர்வதேச சமூகம் ஆர்வமாகவுள்ளதுடன்,  இந்திய அரசாங்கமும் அதற்கு உதவியாக உள்ளது.  

மேலும், சில முதலீடுகளைச் செய்து தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  
-எப்.முபாரக்-
Previous Post Next Post