பொத்துவில்-அருகம்பே பாலத்தில் பொருத்தப்பட்டு நீண்ட காலமாக எரியாமல் உள்ள தெரு விளக்குகளை திருத்தியமைப்பதட்கு நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் நிதியினால் நிர்மானிக்கப்பட்டுள்ள பாலங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் நீண்ட காலமாக எரியாமல் இருப்பதனால் அம்பாறை மாவட்ட மக்கள் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.
குறிப்பாக பொத்துவில் - அருகம்பே பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன தெரு விளக்குகள் நீண்ட காலமாக எரியாமல் உள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பல சிரமங்களை எதிர் நோக்குவதுடன், இப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இயற்கையான கடல், களப்பு வளங்களை பார்க்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது, அத்துடன் இவ்வீதியை போக்குவரத்துக்காக பயனிக்கும் மக்களுக்கும் பெரும் கஷ்டங்கள் ஏற்படுகின்றது.

எனவே, அவசரமாக பொத்துவில் அறுகம்பை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகளை ஒளிர வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென நேற்று அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் தயாகமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கே.கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்தார்.

அருகம்பை பாலத்தில் உள்ள தெரு விளக்குகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் இலங்கை மின்சார சபைக்;கும், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், பொத்துவில் பிரதேச சபைக்கும் இடையில் நீண்ட காலமாக நிருவாக சிக்கலும் தெரு விளக்குகளுக்கான மின்கட்டண மிகுதி செலுத்துவது தொடர்பிலும் இழுபறி நிலமை ஏற்பட்டுள்ளது.

இப்பிரதேசம் இரவு வேளையில் இருளடைந்து இருப்பதனால் இப்பாலம் அமைந்துள்ள இயற்கை சூழலை கண்டுகளிக்கும் நோக்குடன் வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பல கஸ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே, அவசரமாக அருகம்பை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கான ஏற்பாடுகளை இம்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களமும், சுற்றுலாத் துறை அமைச்சும் செயற்படுவதனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி பொத்துவில் அறுகம்பை பாலத்தில் பொருத்தப்பட்டு எரியாத நிலையிலுள்ள தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இதே போன்று அம்பாரை மாவட்டத்தில் பாலங்களில் பொருத்தப்பட்டு எரியாமல் உள்ள தெரு விளக்குகள் தொடர்பான விபரங்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

இது விடயமாக இலங்கை மின்சார சபை உயரதிகாரிகள், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் பொத்துவில் அறுகம்பை பாலத்திற்குரிய மின் விளக்குகளை எரிய வைப்பதற்காக அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும், பொத்துவில் பிரதேச சபையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அம்பாரை மாவட்டத்தில் பாலங்களில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் தொடர்பாக விபரங்களை பெற்று அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவில் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர், இலங்கை மின்சார சபையின் பொறியியளாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியளாளர் இடம் பெறுகின்றனர்.
-Samsul Hutha-
Previous Post Next Post