இறக்காமம் நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயம் செய்யாமல் விதித்த தடையை நீக்கி அடுத்த போகம் வேளான்மை செய்ய நடவடிக்கை

இறக்காம பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் கடந்த 30 வருட காலமாக விவசாயம் செய்து வந்ததை திடீர் என தடை விதித்துள்ளதை நீக்கி தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயம் செய்வதற்கான அனுமதியினை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் தயாகமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கே.கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் கடந்த 30 வருட கால யுத்த நிலமையில் கூட தொடர்ச்சியாக தங்களின் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்து வந்தனர். இக்காணிகளுக்கான உத்தரவுப் பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது. இறக்காம பிரதேச செயலக, தமனப் பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி ஏழை விவசாயிகளின் காணிகளில் விவசாயம் செய்ய வேண்டாம் என திடீர் என தடை விதித்துள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய செயற்பாடாகும்.

அதுவும் நல்லாட்சியில் இவ்வாறு முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது குறித்து கவலை அடைகின்றோம். எனவே, இறக்காம பிரதேச செயலக, தமன பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை தீர்வு காணும் நோக்கில் நீங்கள் நிர்வாக ரீதியில் விசேட குழுவை நியமித்து எல்லைகளை தீர்மானியுங்கள்.

எல்லைப் பிரச்சினையைக் காரணம் கூறி 30 வருட காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயக் காணிகளில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று தடை விதித்திருப்பதால் அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் வேறு பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு போதும், சிங்கள மக்களின் அல்லது தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி  பிடிப்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கமாட்டோம். ஆனால் முஸ்லிம்களின் பாரம்பரியமான காணிகளை பாதுகாப்பதற்கும், அவைகளை மீட்டுக் கொடுப்பதற்கான குரலை எப்போதும் எமது மக்களுக்காக வழங்கிக் கொண்டிருப்போம் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பதில் அளித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. வணிக சிங்க தமன பிரதேச செயலக - இறக்காம பிரதேச செயலக எல்லைகள் தொடர்பாக இப்பிரதேசத்தில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும், இது குறித்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் இது தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிடுகையில்….

அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தமன - இறக்காமப் பிரதேச எல்லைகள் தொடர்பான குழுவாகும். இக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டாம் என தடை விதித்திருப்பது நியாயமல்ல. எனவே, விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான அனுமதியினை வழங்கி விட்டு எல்லைப் பிரச்சினைகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனக் குறிப்பிட்டார். இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்  எதிர்வரும் போகம் இறக்காம நாவலடி வட்டையில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
-சம்சுல் ஹுதா-
Previous Post Next Post