அம்பாறை மாவட்ட அணி தேசிய சம்பியனானது : பொத்துவில் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு

29வது இலங்கை இளைஞர் சம்மேளன மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் அனுராதபுர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் முதல் சுற்றுப் போட்டிக்குத் தெரிவான அம்பாறை மாவட்ட அணி  கொழும்பு, கேகாலை மாவட்ட அணிகளுடன் மோதி கால் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. கால் இறுதிப் போட்டியில் பதுளை மாவட்டத்துடனும், அரை இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்துடனும் மோதி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

06 ஓவர் கொண்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண அணியுடன் முதல் துடுப்பாட்டத்திற்கு தெரிவான அம்பாறை மாவட்ட அணி 06 ஓவருக்கு 05 விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இவர்களை எதிர்த்து ஆடிய யாழ்ப்பாண அணியினர் 06 ஓவருக்கு 05 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு தோல்வியைத் தழுவிய வேளை அம்பாறை மாவட்ட அணி 29 இலங்கை இளைஞர் சம்மேளன மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்ட அணியில் அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம் வீரர்கள் கலந்து கொண்ட போதும் பெருவாரியாக பொத்துவில் பிரதேச வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறு வெற்றி பெற்ற வீரர்களை வரவேற்கும் நிகழ்வு பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களினதும் பங்களிப்புடன் பொத்துவில் பிரதான சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகி பொதுச்சந்தை வழியாக அறுகம்பை மற்றும் சவாளை ஊடாக பொத்துவில் பிரதேச செயலகத்தை அடைந்தது.
உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நசீல் அவர்களின் தலமையில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தில்சாத் அஹமட் பௌன்டேசனின் ஸ்தாபகருமான எம்.எஸ்.அப்துல் வாஸீத், பொத்துவில் இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எல்.முபாறக், இளைஞர் சம்மேளன அதிகாரி, விளையாட்டுக் கழக தலைவர் செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா,
பிரதம ஆசிரியர்,
பாஸ்ட் லங்கா ஊடக வலையமைப்பு-
Previous Post Next Post