Top News

அரசியலமைப்பில் மத அலங்கரிப்பு

உலகில் வாழும் மக்கள் பலவாறான மதங்களை தங்களது வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்கின்றனர்.இறை வழிபாடு ரீதியாக மதங்களின் கொள்கைகள் வேறு பட்டாலும் எந்த மதமும் வன்முறையையும் கேவலவான சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.ஒரு மனிதன் தான் பின்பற்றும் மதத்தை சரியான முறையில் பின்பற்றினால் கூட உலகம் சமாதானப் பூங்காவாக காணப்படும்.உலகில் வாழும் மக்கள் இறை வழிபாடு விடயத்தில் ஒருமித்து செயற்பட முடியாதென்ற நிலை இருந்தாலும் அது தவிர்ந்த ஏனைய விடயங்களில் ஒன்றுபட்டு செயல்படுவது அனைவருக்கும் சிறந்தது.
இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.இந்த நாட்டை அனைவரும் சேர்ந்து கட்டியெழுப்ப வேண்டும்.இன்று இலங்கை நாட்டில் அனைத்து விடயங்களும் மதத்தை அடிப்படையாக கொண்டு தான் இடம்பெறுகின்றன.சாதாரண விளையாட்டுக்களில் கூட பெரும்பான்மையினர் சிறு பான்மையினரை புறக்கணித்து செயல்படுகின்றமை கண்கூடு.ஒரு தடவை ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கிரிக்கட் விளையாட்டின் போது  முஸ்லிம்களில் சிலர் பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஆதரவளிக்கின்றமை இவ்வாறான புறக்கணிப்புக்களால் தான் எனக் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் அண்ணளவாக முப்பது சதவீதம் சிறுபான்மையின மக்கள் வாழ்கின்றனர்.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந் நாட்டில் வாழ்கின்ற மக்களின் பங்களிப்பு அத்தியவசியமானது.ஒரு நாடு முப்பது சதவீத மக்களை புறக்கணித்து தனது வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது.இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றது.ஒரு நாட்டின் அரசியலமைப்பென்பது அந் நாட்டை அனைத்து வகையிலும் வழி நடாத்தும் ஒரு எழுத்து மூல வரைபாகும்.இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் போது இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை உலகத்திற்கே வெளிப்படையாகவே கூறுகிறது.ஒரு பாத்திரத்தில் ஒன்றுடன் ஒன்று கலக்காத இரு திரவங்கள் உள்ளன.இப்போது யாரிடமாவது இப் பாத்திரத்தில் என்னவுள்ளது எனக் கேட்டால் இரு திரவங்களினதும் பெயரைத் தான் கூறுவார்.ஒரு திரவம் இன்னுமொரு திரவத்தை விட அதிகமாகவிருந்தாலும் சரியே.இது போன்றுதான் இலங்கையை ஒரு பௌத்த நாடென ஒரு போதும் கூற முடியாது.இலங்கை ஒரு பௌத்த நாடெனும் போது ஒரு பௌத்த நாட்டின் வளர்ச்சிக்கு ஏன் முஸ்லிம்,தமிழ் மக்கள் உதவ வேண்டும்? இங்கு வாழும் சிறுபான்மை மக்களிடையே இந் நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனைகள்தான் எழுமா? இலங்கை நாடு சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.இதன் காரணமாக அனைத்து விடயங்களிலும் மறைமுகமாக பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.இலங்கை நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் போன்ற உயரிய பதவிகளுக்கு ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவர் வருவதற்கான வாய்ப்புத்தான் உள்ளது.சிறுபான்மையினர் வருவதற்கான வாய்ப்பில்லை என்றாலும் தவறில்லை.இப்படியான நிலையில் பௌத்த மக்கள் இலங்கை நாட்டின் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோருவது அவசியமற்றதும் கூட.இலங்கை நாடு பௌத்த மதத்திற்கு முன்னுருமை வழங்க வேண்டுமென்ற கோசங்களை தவிர்த்து பயணிக்குமாக இருந்தால் இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து சமூகங்களும் உதவுவதோடு மறைமுகமாக பௌத்தத்திற்கும் முன்னுரிமையும் வழங்கப்படும்.

இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற பல விடயங்கள் இனவாதத்தை தான் அடிப்படையாக கொண்டிருந்தன.இதற்கு இலங்கையில் வரையப்பட்ட அரசியலமைப்புக்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் அத்தியாயம் இரண்டு பெளத்த மதம் எனத் தலைப்பிட்டே உள்ளது.இது இவ் அரசியலமைப்பை வரைந்தவர்கள் இனவாத சிந்தனையில் முற்றிப் பழுத்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.இதனை வைத்து இவ் அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தையும் மட்டிட்டுக் கொள்ளலாம்.இலங்கை ஒரு பல்லின நாடாகவுள்ள போது பௌத்த மதத்தை மாத்திரம் இவ்வாறு மேன்மைப்படுத்திருப்பது ஏற்கத்தகுந்த விடயமுமல்ல.

இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் இரண்டு

“9.இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்கப்படல் வேண்டும் என்பதோடு,அதற்கிணங்க 10 ஆம் 14(1)(உ) ஆம் உருப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதே வேளையில்,பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்” எனக் கூறுகிறது.

மேலும் அரசியலமைப்பின்

10.ஆள் ஒவ்வாருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட,சிந்தனை செய்யும் சுதந்திரம்,மனச் சாட்சியை பின்பற்றும் சுதந்திரம்,மத சுதந்திரம் என்பவற்றிற்கு உருத்துடையவராதல் வேண்டும்.

14(1)(உ).தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்து,பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும்,அனுசரிப்பிலும்,சாதனையிலும்,போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்

இலங்கை ஒரு பல்லின நாடாதலால் சில சந்தர்ப்பங்களில் எந்த மதத்தை முன்னிலைப்படுத்துவது என்ற பிரச்சினைகள் தோன்றலாம்.உதாரணமாக தேசிய ரீதியில் ஒரு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் போது அங்கு எந்த மத அனுஸ்டானத்திற்கு முன்னுரிமை வழங்குவதென்பதை கூறலாம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கையில் பெரும் பான்மையாக சிங்கள மக்கள் இருப்பதன் காரணமாக அவர்களது மத அனுஸ்டானத்திற்கு முன்னுரிமை வழங்குவது பொருத்தமானது.இங்கு சிறுபான்மையின  மக்கள் சமத்துவம் கேட்காதிருப்பது சிறந்தது.அண்மையில் யாழ்ப்பான பல்கலைக் கழகத்தில் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் யாரினது காலச்சாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதென்ற பிரச்சினை தோன்றியிருந்தது.இதனை இலங்கை அரசியலமைப்பின் படி நோக்கும் போது  பௌத்த மதத்திற்கே முக்கியத்துவம் வழங்கியிருக்க வேண்டும்.இவ்வாறான பிரச்சனைகளை இதனடிப்படையில் யாரும் நோக்குவதில்லை என்பதால் பிரச்சினைகள் எழுவதில்லை.நோக்கினால்..? யாழ்ப்பான பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஒன்றாகும்.இங்கு சிங்கள கலாச்சாரத்தை அந்த மக்கள் ஏற்றுக்கொள்வது கடினமான விடயம்.இங்கு நான் கூற வரும் விடயம் சில விடயங்களில் எந்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தாலும் அது எந்தெந்த விடயங்களிலென தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களின் உரிமைகள் பற்றி இலங்கை அரசியலமைப்பின் 10 ஆம் 14(1)(உ)ஆம் உறுப்புருமைகள் தான் பேசுகின்றன.இவைகள் கூட அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் என்ற வகையிலேயே பேசுகிறது.அடிப்படை உரிமை என்பது ஒரு மனிதனுக்குள்ள மிகக் குறைந்த உரிமையாகும்.பௌத்த மதம் எனத் தலைப்பிட்ட அத்தியாயம் இரண்டு 10 ஆம் 14(1)(உ) ஆம் உருப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.இக் கூற்று அத்தியாயம் இரண்டில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த அடிப்படை உரிமைகளுடன் இடைவெட்டலாம் என்பதாகும்.இதன் மறு பொருள் 10 ஆம் 14(1)(உ) ஆம் உருப்புரைகளில் ஒரு மதத்திற்கு வழங்கப்படும் உரிமைகள் தவிர்ந்து ஏனைய விடயங்களில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதாகும்.இது இலங்கை அரசியலமைப்பில் உள்ள மிகவும் ஆபத்தான ஏற்பாடும் கூட.குறைந்தது இலங்கை அரசியலைப்பு பௌத்த மதம் என்பதற்குப் பதிலாக மதம் எனத் தலைப்பிட்டாவது அதில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துவதோடு ஏனைய மதங்களின் உரிமைகள் பற்றியும் அவ் அத்தியாயம் பேச வேண்டும்.அடிப்படை உரிமை என்ற வகையில் இலங்கை அரசியலமைப்பு இலங்கையில் உள்ள ஏனைய மதங்களின் உரிமைகளை வழங்கியுள்ளமை அம் மதங்களை ஒரு பொருட்டாகவே கருத்திற் கொள்ளாததை எடுத்துக் காட்டுகிறது.

இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் இரண்டின் மூலம் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.பௌத்த மதத்தை பௌத்தர்கள் தான் பாதுகாக்க வேண்டும்.அதனை வேறு மக்களிடம் பாதுகாக்க வேண்டும் எனவோ அல்லது வளர்க்க வேண்டும் எனவோ கோர முடியாது.இலங்கை நாட்டை ஆளும் அரசில் பல்லினங்கள் உள்ளன.தற்போதுள்ள இலங்கை அரசின் மிகப் பெரும் பங்காளிகளாக சிறு பான்மையின மக்கள் தான் உள்ளனர்.இப்படியான நிலையில் பௌத்த மதத்தை இலங்கை அரசு வளர்க்க வேண்டும்,பாதுகாக்க வேண்டும் எனக் கோருவது அவ் அரசின் பங்காளிகளாகவுள்ள சிறு பான்மை மக்களிடத்திலும் மறைமுகமாக கோருவதாகவே பொருள் படும்.இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதயல்ல.ஒரு அரசு மக்களிடமிருந்து அறவிடுகின்ற வரிப் பணத்தின் மூலமே இயங்குகிறது.இலங்கை அரசு பௌத்த மதத்தை பேணிப் பாதுகாக்க வளர்க்க செயற்படும் போது சிறுபான்மையின மக்களின் வரிப்பணமும் அங்கு பயன்படுத்தப்படும்.பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு ஏன் சிறு பான்மையின மக்கள்  உதவ வேண்டும்.இலங்கை அரசியலமைப்பில் இவ்வாறு குறிப்பிடப்படுவதன் மூலம் இலங்கையில் பௌத்த அரசே ஆட்சி செய்கிறது.தற்போது மாற்றப்படவுள்ள அரசியலமைப்பிலாவது இலங்கையில் மத சாயலற்ற அரசுக்கு வழி வகுக்க வேண்டும்.

எனினும்,அது அவ்வளவு இலகுவான காரியமல்ல.தற்போது இலங்கை  அரசியலமைப்பு முற்று முழுதாக மாற்றம் பெறவிருந்தாலும் இலங்கை மக்கள் மாற்றம்பெறவுள்ள அரசியலமைப்பை தற்போதுள்ள அரசியலமைப்புடன் ஒப்பிட்டே அதன் பயனை உறுதி செய்து கொள்வார்கள்.இலங்கையின் முதலவாது அரசியலமைப்பு 1972ம் ஆண்டு வரையப்பட்டிருந்தது.இதன் போது இலங்கை ஒரு மத சார்பற்ற நாடு என்ற வகையில் இலங்கையின் அரசியலமைப்பை வரைந்திருந்தால் அது ஒரு பெரிய பேசு பொருளாக மாறியிருக்காது.தற்போதுள்ள வடிவத்தில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கும் போது அது பேரின மக்களிடையே பௌத்தத்திற்கு எதிரான அரசியலமைப்பாக பார்க்கப்படும்.இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பின் அத்தியாயம் இரண்டில் உள்ள ஒன்பதாம் உறுப்புருமையை மாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கை அரசு சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும்.இந்த பாகங்களை மாற்றி சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் அதில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.இவ் அரசியலமைப்பு மாற்றத்திற்காக பிரதமர் ரணிலால் நியமிக்கப்பட்டிருந்த மக்கள் கருத்தறியும் குழுவின் இது தொடர்பான அறிக்கையிலும் இவ்விடயத்தில் மாற்றத்தை கொண்டு வரும் போது அது அரசியலமைப்பு மாற்ற முயற்சியை பாதிக்கும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக வரவுள்ள அரசியலமைப்பில் முஸ்லிம்கள்  பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுவதால் இன்று முஸ்லிம் மக்கள் தற்போதுள்ள அரசியலமைப்பு அப்படியே இருந்தாலே போதுமென நினைக்கின்றார்கள்.தமிழ் மக்கள் அரசியலமைப்பின் மாற்றத்தை ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்.இந்த அரசியலமைப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் பேரின மக்களுக்கு வெளியில் பூசியே உள்ளுக்கு ஆப்பு சொருக வேண்டும்.இலங்கை நாட்டில் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் 1997ம் ஆண்டு அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக அரசாங்க ஆலோசனையில்  பௌத்த மதம் என்ற அத்தியாயத்தினுள் தற்போதுள்ளதை விடவும் அதிகமாக ஒரு உப பிரிவு உட்புகுத்தப்பட்டிருந்தது.இதன் மூலம் இலங்கை அரசு பௌத்த மதத்தின் அந்தஸ்தை மேலும் அதிகரிக்க விளைந்தாலும் அந்த அரசியலமைப்பு சீர்திருத்தப் பொதியில் சிறு பான்மையின மக்களுக்கு அதிகமான தீர்வுப் பொதிகளை உள்ளடக்கியிருந்தது.அதாவது பெளத்த மதத்தை வெளியில் பூசி மெழுகி சந்திரிக்கா சிறுபான்மையின மக்களை (தமிழ் மக்களை) திருப்தி செய்ய முனைந்தார்.அன்று அது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தாலும் பேரினவாத எதிர்ப்புக்களால் கை விடப்பட்டிருந்தது.இது போன்று தான் இவ்விடயத்தையும் தமிழ் மக்கள் அணுக வேண்டும்.தமிழ் மக்கள் இதனையும் சமத்துவம் வேண்டும் என்று தூக்கிப் பிடித்தால் ஓட்டில் திண்டதையும் கண்ணாரப் பையன் கெடுத்த கதையாகிவிடும்.

தற்போது இப்படியான விடயங்களை வைத்து அரசியல் செய்ய மஹிந்த அணியினர் தயார் நிலையில் உள்ளனர்.தற்போதைய அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்து எவருமே வாய் திறக்காத நிலையில் மஹிந்த அணியினர் அதனை கிளறிவிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இலங்கையில் அரங்கேறிய சில செயற்பாடுகளை வைத்து மஹிந்த அணியினர் இந்த நடவடிக்கையை மேற்கொன்டாலும் தற்போது அது வேறு வடிவில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இது பற்றி மல்வத்த பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தற்போது உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் தற்போதுள்ளது போன்று பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தை அழுத்தம் திருத்தமாக முன் வைத்துள்ளார்.இலங்கையில் உள்ள மகா சங்கங்களை எதிர்த்து இலங்கையில் எதுவுமே செய்ய முடியாது.மகாநாயக்க தேரர் இவ்விடயத்தில் தலையிட்டுள்ளதால் இலங்கை அரசு இதில் ஒரு போதும் கை வைக்கவும் விரும்பாது.

புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பேச்சுக்களில் கடந்த வாரம் இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விடயம் மிகவும் சூடு பிடித்துக் காணப்பட்டது.இவ் விடயம் கடந்த வாரம் சூடி பிடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளது எனக் கூறியமையே சூடி பிடிப்பின் பிரதான காரணமாகும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல்லின மக்கள் வாழும் இந் நாட்டில் மதச் சார்பற்ற ஒரு அரசு அமைய வேண்டும் என்பதை தனது கொள்கைகளில் ஒன்றாக கொண்டுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.இருந்தாலும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எதுவுமே சொல்லவில்லை.இப்படியான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரைப் பாவிக்காது பொதுப்படையாக பேசிவிட்டுச் சென்றிருக்கலாம்.தனது பெயரை பிரதமர் பாவித்ததால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டது.மஹிந்தவின் வீசிய இனவாத வலையில் இவர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமா என்ற வினா எழுந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது பிரதமர் இவ்வாறு கூறுவாரா என்ற வகையிலும் சிந்திக்க வேண்டும்.இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரதமரும் மாமன் மச்சான் விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பது மாத்திரம் தெளிவான உண்மை.1997யில் சந்திரிக்கா கையாண்ட உத்தி போன்று மத ரீதியான விடயங்களில் கைவைக்காது பிரதமரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கலாம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவிக்கும் போதும் எழத்தக்க பாதிப்பை சிந்திக்காது பிரதமர் இவ்வாறான விடயத்தை கூறியிருக்க வேண்டும்.இலங்கை அரசினால் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு ஒரு மத சாயலற்றதாக இருந்தால் அது இலங்கை நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்தது.அது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படும் காரியமல்ல.இப்படியே சாத்தியமல்லவென்று சருகாது இதனை பேரின மக்களின் உள்ளத்தில் பதிக்கும் நடவடிக்கையை இலங்கையில் புத்திஜீவிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.முயன்றால் முடியாதது எதுவுமல்ல.

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
சம்மாந்துறை.

Previous Post Next Post