ஆரம்ப கல்வியின் போதே மாணவர்களுக்கான மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

பாலர் பாடசாலைகளில் ஆரம்ப கல்வி கற்கும் மாணவர்களுக்கு தத்தமது மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்ப பருவத்தில் இருந்தே மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக நமது மாணவர்கள் திகழ்வதற்கு பாலர் பாடசாலை பணிப்பாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என சர்வதேச சிறுவர் தினமும், சிறுவர் பொருட்காட்சி நிகழ்வும் அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் கே.எம்.சுபையிர் தலைமையில் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்.....

அன்று நாம் வீட்டுச் சூழலிலும், குடும்ப சூழலிலும் வாழ்ந்து கொண்டிருந்த போது திடீர் என பெற்றோர்கள் எங்களை பாடசாலைக்கு செல்ல வேண்டும் என அறிவித்தார்கள். நாம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு சேரும் போது முன் பயிற்சிகள் எதுவும் இல்லாமல் அச்சமடைந்த நிலமையில்தான் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விக்காக பெற்றோர்களால் சேர்க்கப்பட்டோம். ஆனால் இன்றைய நவீன உலகத்தில் தரம் ஒன்றுக்கு பாடசாலையில் சேர்ப்பதற்கு முன் நமது பிள்ளைகள் பாலர் பாடசாலைகளில் தங்களின் ஆரம்பக் கல்வியினையும், ஆளுமையினையும் பெற்று அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படுகின்றனர். தங்களிடமுள்ள ஆளுமையினை வளர்த்து எல்லாத் துறைகளிலும் பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். இந்த விடயத்தில் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ளது.
கிழக்கு மாகாணம் கடந்த 30 வருட கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் நமது பிள்ளைகளின் ஆரம்ப கல்விக்காக பாலர் பாடசாலை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கான பாலர் பாடசாலை பணியகத்தினை உருவாக்கினார். அதனால் கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைகளின் தகவல்கள், ஆசிரியர்களின் தகவல்கள், பாடவிதான முறைகள், பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களும் முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில்  அவரால் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையில் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி அவர்களின் அமைச்சில் தற்போது இத்துறையின் வளர்ச்சி கண்டுவருவது பாராட்டப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள், மாணவர்கள் நல்ல நிலையை அடையும் போது அவர்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி போன்று நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணியகம் தொடர்பாக அன்று நாங்கள் எண்ணிய நல்ல எண்ணங்கள் இன்று நல்ல முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
நமது கிழக்கு மாகாணத்திற்கு தற்போது அவசியமாக தேவைப்படுகின்ற நிகழ்வுகளை கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணியகம் நடாத்தி வருகின்றமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒரே இடத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து நமது பிள்ளைச் செல்வங்களின் ஆளுமை அபிவிருத்தி நிகழ்வுகளையும் தத்தமது கலை, கலாசார நிகழ்வுகளையும் கண்டு கழிக்கின்ற இந்நிகழ்வுகள் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்றன.

கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நம்மவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் வசதி வழங்கப்படுமாயின் கிழக்கு மாகணத்தின் பொருளாதார, வாழ்வாதார துறைகளில் பாரிய வளர்ச்சி ஏற்படும். இதற்கான திட்டங்களை கிழக்கு மாகாண சபை செயற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


-எம்.ஜே.எம்.சஜீத்-
Previous Post Next Post