Top News

06 கோடி ரூபாய் பெறுமதியில் வைத்திய உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கும் நிகழ்வு

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு வினைத்திறனுடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு சுமார் 06 கோடி ரூபாய் பெறுமதியில் வைத்திய உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கும் நடவடிக்கை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அரசின் நிதி ஒதுக்கீட்டில் இங்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தான் இதன் உண்மையான பயனை அடைய முடியும். அரசின் வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அப்போது தான் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு நாம் எல்லோரும் சுகதேகிகளாக வாழ வேண்டும். உணவுப்பழக்கவழக்கத்தினை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் எல்லோரும் சிறந்த சுகதேகிகளாக வாழலாம்.

இதனை மக்கள் முன்கொண்டு செல்வது துறைசார்ந்த அதிகாரிகளின் கையில் தங்கியுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தான் எமது சேவை சிறப்பாக அமையும். ஒரு நாடு அபிவிருத்தி பாதையை நோக்கிச் செல்வதற்கு அங்கு சுகாதரத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் பல்வேறு சுகாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஒரு பிரதேசத்தின் சுகாதாரம் சிறந்த முறையுடனும் வினைத்திறனுடனும் அமைவதற்கு அப்பிரதேச வைத்தியசாலைகள் செயற்பட வேண்டும். எனவே, எமது நாட்டின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்கு இங்குள்ள சுகாதார அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றார்.
-அபு அலா-
Previous Post Next Post