உள்ளூராட்சித் தேர்தல்;வியூகம் வகுக்கும் கட்சிகள்

ஒரு தேர்தல் நடைபெற்று முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் தாங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளினை கட்சிகள் நிறைவேற்றுகின்றதோ? இல்லையோ? எதிர்வருகின்ற தேர்தலினை எவ்வாறு எதிர் கொள்ளுவது? என சிந்திக்க ஆரம்பித்துவிடும்.
இலங்கை நாட்டில் எட்டு மாதம் எனும் குறுகிய கால இடைவெளியினுள் இரு தேர்தல்கள் நடை பெற்று முடிந்துவிட்டன.இன்னும் மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மூன்றாவது தேர்தல் நடைபெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.நீண்ட காலம் உள்ள போதே நிக்க நேரமில்லாமல் அலைந்து திரியும் அரசியற் கட்சிகளுக்கு நேரம் நெருங்கி விட்டால்,அவற்றின் வயிற்றில் நெருப்பினைக் கட்டிக் கொண்டு பிசாசுகள் போல் அங்கும் இங்கும் அலைந்து திரியும்.

தனது கட்சியினால் தனித்து வெற்றிக் கிரீடத்தினை அணிந்து கொள்ள முடியும் எனக் கருதும் கட்சிகள் நேரடியாக மோதும்.பலமிக்க எதிரிகளினை வீழ்த்த சிறு சிறு பலமிக்கவர்கள் ஒன்றிணைந்தும் வேரோடு வீழ்த்தி சரிப்பார்கள்.ஒப்பந்தங்கள் ஓராயிரம் இடம்பெறும்.தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை நோக்கி கட்சிகள் தங்கள் காய் நகர்த்தல்களினை ஆரம்பித்துள்ளன.கடந்த இரு தேர்தர்லில் ஒன்றிணைந்து செயற்பட்ட மைத்திரி,ரணில் அணியினர் இம் முறை பிரிந்து செயற்படுவது தான் இத் தேர்தலின் சிறப்பம்சமாகும்.ஜனாதிபதி மைத்திரியின் பலம் என்ன?பிரதமர்  ரணிலின் பலம் என்ன? என்பன மக்களுக்கு வெள்ளிமடையாய் வெளிப்படப் போகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களால் தனித்து மஹிந்தவினை வெற்றி கொள்ள முடியாது என்பதனை ஐ.தே.க நன்கே அறியும்.தன் சின்னத்தினையும்(தன் மானத்தினை),பெயரினையும் விட்டுக் கொடுத்து மைத்திரி அணியுடன் இணைந்து மஹிந்தவின்  சாம்ராஜ்ஜியத்தினை தரைமட்டமாக்கியது.இவ் வெற்றியில் ஐ.தே.கவிற்கு 70%  மேல் பங்குண்டு என்பது யாருமே மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.வெற்றியில் ஐ.தே.கவிற்கு பெரும் பங்குள்ள போதும் பேரும் புகழும் என்னவோ? மைத்திரிக்கே சொந்தமானது.இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பதவிகளில் அதிகமானவற்றினை ஐ.தே.கவே தன் வசப்படுத்தியது என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்க ஒரு விடயமாகும்.அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க தனது சின்னத்தில் அதீத நம்பிக்கையுடன்  களமிறங்கிய போதும் தனது பெயரினை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இத் தேர்தலில் மைத்திரி ஐ.தே.விற்கு தனது நேரடியான ஆதரவினை வழங்காது போனாலும் மறைமுக ஆதரவினை வழங்கினார்.

ஜாதிக ஹெல உருமய உட்பட மைத்திரி சார்பு அணியினர் பலர் ஐ.தே.கவின் யானைச் சின்னத்திலேயே போட்டி இட்டனர்.இவர்களில் ராஜித சேனாரத்ன,ஹிருனிகா,அர்ஜுனா ரணதுங்க,சம்பிக்க ரணவக்க,எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரினை பிரதானமானவர்களாக குறிப்பிடலாம்.ஜாதிக ஹெல உருமய கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் ரணில் பொது வேட்பாளராக களமிறங்கினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் எனக் கூறிய ஒரு காட்சியாகும்.ராஜித சேனாரத்ன மைத்திரியின் வலக்கரமாகும்.ஹிருனிகா மைத்திரி அரசின் செல்லப் பிள்ளையாகும்.

இவர்களின் ஐ.தே.கவுடனான இணைவு தற்காலிகமான இணைவாகும்.இவர்கள் மைத்திரி எப் பக்கம் நிற்பாரோ அப் பக்கமே தங்கள் அரசியல் முகத்தினை திருப்புவார்கள்.இதனை நிறுவல்களுடன் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.மைத்திரி சு.கவின் தலைவராக இருந்தும் அக் கட்சியின் வெற்றியினை நோக்கிய பயணத்திற்கு சிறு பங்களிப்புக் கூடச் செய்ய வில்லை.சுருக்கமாக சொல்வதானால் மைத்திரி உடல் சு.க பக்கம் காணப்பட்டது.உயிர் ஐ.தே.கவின் வெற்றிக்காக உழைத்தது.இவ்வாறான நிலையில் கூட ஐ.தே.கவினால் போனஸ் ஆசனம் உள்ளடங்கலாக 107 ஆசனங்களினை  மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.உள் வீட்டில் நெருப்பு கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்த போதும் சு.க போனஸ் ஆசனம் உள்ளடங்கலாக 95 ஆசனங்களினை பெற்றுக் கொண்டது.

மேற் குறிப்பிட்டுள்ள மைத்திரி சார்பு அணியினர்  ஐவரும் பாராளுமன்றம் தெரிவானார்கள்.ஜாதிக ஹெல உருமய சார்பாக சம்பிக்க மாத்திரம் தெரிவானாலும் அது இலட்சக் கணக்கான சிங்கள மக்களின் வாக்குகளுக்கு சொந்தமான ஒரு கட்சியாகும்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதனுடைய தாக்கம் அபரிதமானதாக இருக்கும்.ஏனையவர்களும் அதி கூடிய விருப்பு வாக்குகளால் தெரிவாகி இருந்தார்கள்.இவர்கள் ஐவரும் தனித்து களமிறங்கி இருந்தால் ஐவரும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ள அதே நேரம் குறைந்தது இரண்டு போனஸ் ஆசனங்களினையும் இவர்களினால் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும் என்பதை யாவரும் ஏற்பார்கள்.இம் முறை இவர்களின் வாக்குகள் அனைத்தும் ஐ.தே.கவிற்கு கிடைத்ததால் ஐ.தே.கவிற்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் இரண்டு போனஸ் ஆசனங்கள் இவர்களுக்கு உரித்தானது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க பெற்றுக் கொண்ட ஆசனங்களில் ஏழு ஆசனங்கள் மைத்திரி சார்பு அணியினருக்குச் சொந்தமானது.மைத்திரி சார்பு அணியினரின் ஆசனங்களினை  ஐ.தே.கவின் ஆசனங்களில் இருந்து  கழிக்கும் போது ஐ.தே.கவின் ஆசனங்களாக  100 ஆசனங்கள் எஞ்சும்.இந்த ஏழு ஆசனங்களும் சு.கவின் ஆசனங்கள் என்பதால் அது பெற்றுக் கொண்ட 95 ஆசனங்களுடன் இந்த ஆசனங்களினையும் கூட்டும்  போது 102 ஆசனங்கள் சு.கவின் ஆசனங்களாக பெறப்படும்.இதில் இருந்து ஐ.தே.கவின் மானம் பறி போகாமலும்,மஹிந்த ஆட்சி பீடம் ஏறாமலும் மைத்திரி அணியினரே காப்பாற்றியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மைத்திரி சு.கவினை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.இத் தேர்தலில் மைத்திரி சார்பு அணியினரின் ஆதரவினை ஐ.தே.க பெற்றுக் கொள்ளாது என்பதை உறுதிபட கூறலாம்.இந் நிலைமை தோற்றம் பெறும் போது இரு அணியினரும் சம பலத்துடன் திகழ்வார்கள் என்பதையே கடந்த தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.ஜனாதிபதி மைத்திரி சு.காவிற்கு சார்பாக களமிறங்கும் போது பாரிய மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.ஜனாதிபதி மைத்திரியின் சொந்த மாவட்டமான பொலனறுவையினைக் கூட கடந்த தேர்தலில் ஐ.தே.கவே கைப் பற்றி இருந்தது.இந்த நிலைமை மைத்திரி சு.கவிற்கு ஆதரவாக கை அசைக்கும் போது இருக்காது.

கடந்த தேர்தலின் போது மக்கள் கட்சிகளுக்கு வழங்கிய அதே ஆதரவுகளினையே எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எதிர்பார்க்கலாம்.மஹிந்த ராஜ பக்ஸ தனித் தரப்பாக களமிறங்கி சு.க இரண்டு துண்டுகளாக பிளவு படும் என்ற கருத்தும் ஓங்கி வருகிறது.பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களினை கைப்பற்றுவதன் மூலம் அரசினை தாங்கள் இன்றி நகர முடியாத நிலைக்கு இட்டுச் செல்லலாம்.உள்ளூராட்சி மன்றங்களில் அதிகமானவற்றினை மஹிந்த அணியினர் கைப்பற்றுவதன் மூலம் எது வித சவாலினையும் அரசிற்கு வழங்க முடியாது.மஹிந்தவின் தலையினை மீறி வெள்ளம் பாய்ந்து கொண்டு செல்லும் இக் காலத்தில் அரசிற்கு அழுத்தம் வழங்க முடியாத ஒரு விடயத்தில் மஹிந்த தனது மூக்கினை நுழைக்க மாட்டார் என்றே நம்பப்படுகிறது.எதிர் கால அரசியல் நலனில் குறி வைக்கும் சிலரே தங்களது மதிப்பினை வெளிக்காட்ட இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்த விளைகிறார்கள்.

ஐ.தே.க முஸ்லிம் கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்த தேசியப் பட்டியலினைத் தவிர வேறு யாருக்கும் தனது நேரடியான தேசியப்பட்டியலினை வழங்கவில்லை.முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த தேசியப் பட்டியலினை ஐ.தே.கவிற்கு சொந்தமான தேசியப்பட்டியலாக கருத முடியாது.ஐ.தே.க சார்பாக 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.முஸ்லிம்களின் பங்களிப்பின்றி ஐ.தே.க பெறச் சாத்தியமான ஆசனங்களினைக் கணிப்பிட ஐ.தே.க  இம் முறை பெற்றுக் கொண்ட ஆசனங்களில் இருந்து (சு.கவின் பங்களிப்பின்றி) முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை கழிப்போம்.முஸ்லிம்களின் பங்களிப்பின்றி 83 பாராளுமன்ற உறுப்பினர்களினையே ஐ.தே.கவினால் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும்.

சு.க தனது மூன்று தேசியப் பட்டியலினை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது.இதில் ஒரு தேசியப்பட்டியலினை முஸ்லிம்கள் பெறும் அளவு கூட சு.கவிற்கு வாக்களிக்கவில்லை.எனினும் முஸ்லிம்களின் வாக்கு சு.காவின் ஒரு தேசியப்பட்டியலிற்கு பங்களிப்புச் செய்துள்ளதாக கருதுவோம்.சு.க சார்பாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரே தெரிவாகியுள்ளார்.முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியும் சு.கவினால் 100 ஆசனங்களினை பெற முடிந்திருக்கும்.ஐ.தே.கவின் வெற்றியில் முஸ்லிம்களின் பங்களிப்பு அபரிதமானது என்பதை யாருமே மறுக்க முடியாது.இம் முறை ஐ.தே.க தனது வெற்றினை உறுதிப்படுத்த முஸ்லிம்களின் வாக்குகளினை தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும்.தக்க வைக்குமா?

மஹிந்த அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே முஸ்லிம்கள் ஐ.தே.கவின் பக்கம் சார்ந்தார்கள்.ரணில் அரசின் மீதும் முஸ்லிம்களுக்கு கூறுமளவு பற்றில்லை.மைத்திரி அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம் பகுதிகளில் களமிறங்கினால் முஸ்லிம்களின் குறித்தளவு வாக்கினைப் பெற்றுக் கொள்ள முடியும்.மஹிந்த உருவாக்கி வைத்துள்ள பல முஸ்லிம் பிரபலங்கள் தற்போது தங்கள் முகவரியினை தொலைத்து நிற்கின்றனர்.இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இவர்களில் சிலரின்  அரசியலுக்கு மைத்திரியின் ஆதரவு முகவரியினை வழங்கும்.

ஐ.தே.கவில் உள்ள 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே ஐ.தே.க மூலம் நேரடியாக தெரிவானவர்கள்.ஏனையவர்கள் மு.கா,அ.இ.ம.காவின் மூலம் தெரிவானவர்களே! ஐ.தே.க முஸ்லிம்களின் ஆதரவுகளினை தக்க வைக்க மு.கா,அ.இ.ம.கா ஆகியவற்றினை தங்கள் வலைக்குள் வீழ்த்தினால் போதுமாகும்.இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மு.காவினைப் பொறுத்த மட்டில் ஐ.தே.கவுடன் இணைந்து கூட்டாஞ் சோறு ஆக்குவதை விட சில இடங்களில் தனித்து களமிறங்குவது சிறப்பானதாகும்.

மு.கா கடந்த பிரதேச சபைத் தேர்தலில் அம்பாறை,மட்டக்களப்பு  மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் சு.கவுடனும் இணைந்தும் போட்டி இட்டிருந்தது.அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐந்து முஸ்லிம் சபைகளினை (இறக்காமம்,பொத்துவில்,நிந்தவூர்,அட்டாளைச்சேனை,கல்முனை) கைப்பற்றியது.மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆளச் சாத்தியமான மூன்று சபைகள்(கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,காத்தான்குடி நகர சபை,ஏறாவூர் நகர சபை)  காணப்படுகின்ற போதும் மு.காவினால் எச் சபையினையும் கைப்பற்ற  முடியவில்லை.திருகோணமலையில் முஸ்லிம்கள் ஆளச் சாத்தியமான ஐந்து  சபைகள் (மூதூர் பிரதேச சபை,கிண்ணியா நகர சபை,கிண்ணியா பிரதேச சபை,தம்பலகாமம் பிரதேச சபை,குச்சவெளி பிரதேச சபை) உள்ள போதும் மூதூர் உள்ளூராட்சி மன்றத்தில் மாத்திரம் தட்டுத் தடுமாறி தனது கட்சியினைச் சேர்ந்தவரினை தவிசாளராக்கியது.எனினும்,அதன் வெற்றியின் முழுப் பங்குதாரராக மு.காவினைக் குறிப்பிட முடியாது.

இம் முறை அம்பாறையில் மு.கா தான் முன்னர் தக்க வைத்துக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களினை தக்க வைத்துக் கொள்ள ஏதுவான ஒரு சூழ் நிலை தோற்றம் பெற்றுள்ளது.அம்மணமாய்க் கிடந்த சம்மாந்துறைக்கு மு.கா பாராளுமன்ற,மாகாண சபை உறுப்புருமையினை வழங்கி ஆடை அணிவித்து அழகு பார்த்துள்ளது.சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாத்தும் மு.காவில் இணையப் போவதாகவும் கதைகள் பிசு பிசுக்கின்றன.அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் மு.காவில் இணையக் கூடிய ஒரு சைகையினையும் காட்டியுள்ளார்.அதாவுல்லாஹ் மு.காவில் இணைந்தால் சம்மாந்துறை,அக்கரைப்பற்று இரு சபைகளினையும் மிக இலகுவாக மு.கா தன் வசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.அம்பாறை மாவட்டத்தில் மு.கா கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இழந்த சபைகளினையும் கைப் பற்றுவதற்கான சாதகத் தன்மை அதிகமாக உள்ள போது,ஐ.தே.கவுடன் இணைந்து தனது வெற்றியினை மறைத்துக் கொள்ள விரும்பாது.மேலும்,அம்பாறையில் ஐ.தே.கவுடன் இணையும் போது தனது உறுப்பினர்களினை தக்கவைப்பதற்கான வியூகங்கள் வகுப்பதும் சிரமமான ஒரு விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையினையும் மு.கா இலகுவாக கைப்பற்றும்.NFGG யுடனான கூட்டினை மு.கா தொடருமாக இருந்தால் காத்தான்குடி நகர சபையும் மு.காவின் வலைக்குள் வீழ்வதற்கான சாத்தியம் உள்ளது.கோரளைப்பற்று மேற்கினை கைப்பற்றும் அளவு மு.கா அங்கு பலமிக்கதாக இல்லை.எனினும்,ஐ.தே.கவுடன் இணைந்து மு.கா பெறச் சாத்தியமான உறுப்பினரினை அங்கு தனித்து நின்றே அதனால் பெற்றுக் கொள்ள முடியும்.இவைகள் தவிர்ந்த எங்கும் மு.காவினால் தனித்து கைப்பற்ற முடியாது.கடந்த முறை திருகோணமலையில் மூதூர் பக்கம் தத்திப் பித்து கால் வைத்து வந்த போதும் இம் முறையுடன் மு.காவின் கால்கள் அங்கு வெட்டப்பட்டுள்ளது.இவைகளினை வைத்து நோக்கும் போது மு.கா அம்பாறை,மட்டக்களப்பில் தனித்து களமிறங்கும் அதே வேளை ஏனைய மாவட்டங்களில் ஐ.தே..கவுடன் இணைந்தும் கேட்பது பொருத்தமானதாக இருக்கும்.இத் தேர்தலில் மு.காவானது தங்களோடு அவ்வளவில் இலகுவில் இணையாது என்பதனையும் ஐ.தே.க நன்கே அறியும்.

முன்னர் போன்று தான் வெற்றி பெறக் கூடிய மாவட்டங்களில் தனித்தும்,வெற்றி பெற முடியாது எனும் இடங்களில் ஐ.தே.கவின் வாக்கில் நனைந்து கொள்ள இடமளிக்கும் அளவு ஐ.தே.க ஒரு ஏமாளிக் கட்சியல்ல.மேலும்,தற்போது மு.கா காலை வாரினால் அதனை ஓரளவு சமாளிக்கும் அளவு அ.இ.ம.கா உருவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் குறிப்பாக திருகோணமலை,வன்னி,புத்தளம் மாவட்டங்களில் மு.காவினை விட அ.இ.ம.கா பலமிக்கதாக உள்ளது என்றாலும் தவறில்லை.மட்டக்களப்பில் ஏறாவூர் நகர சபை பக்கம் அ.இ.ம.காவினால் செல்ல முடியாது போனாலும் கோரளைப்பற்று மேற்கினை மு.காவினால் கைப்பற்ற முடியாத நிலையே உள்ளது.அம்பாறையிலும் மு.காவின் அளவு வாக்கினை பெற முடியாவிட்டாலும் மு.காவிற்கு சவாலினை ஏற்படுத்தும் அளவிலான வாக்கினை அ.இ.ம.காவினால் பெற்றுக் கொள்ள முடியும்.

மு.கவின் உதவி தேவைப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் மு.காவானது ஐ.தே.கவிற்கு உதவாது போகின்ற போது,எதற்கு ஐ.தே.கவிற்கு மு.கா? இதனை விட அ.இ.ம.காவுடன் கூட்டிணைகின்ற போது அம்பாறை மாவட்டத்தில் தனது வெற்றியினை அதிகரித்துக் கொள்வதற்கான சாதகத் தன்மையினை அதிகரித்து கொள்ள முடிவதுடன்,ஏனைய மாவட்டங்களிலும் ஐ.தே.கவும் அ.இ.ம.காவும் இணைந்து பாரிய வெற்றிகளினை சுவைத்துக் கொள்ளும்.இதன் காரணமாகவே ஐ.தே.கவானது இத் தேர்தல் விடயத்தில் மு.கவுடன் ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டாது அ.இ.ம.காவுடன் ஒப்பந்தங்கள் செய்ய ஆர்வம் காட்டுவதற்கான பிரதான காரணமாகும்.அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கவின் உதவியுடன் அ.இ.ம.கா தனக்குத் தேவையான பாரிய ஆதரவுத் தளத்தினை இத் தேர்தலோடு அமைத்துக் கொள்ளும்.
-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை-

Previous Post Next Post