2 கோடி 50 இலட்சம் செலவில் மெடி சிலோன் மருத்துவ ஆய்வுகூடம் ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பில் அதி நவீன முறையில் கணனி மயப்படுத்தப்பட்ட மெடி சிலோன் தனியார் மருத்துவ ஆய்வுகூடம் இன்று வியாழக்கிழமை (22) திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த மருத்துவ ஆய்வுகூடம் பரிசோதனையை ஆரம்பித்து வைத்தார்.

இதுதொடர்பில் நிறுவனத்தின் பணிப்பாளர் இந்தியா கேரளாவைச் சேர்ந்த பாவு சர்மா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அதி நவீன முறையில் 2 கோடி 50 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த மெடி சிலோன் மருத்துவ ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை கிழக்கு மாகாணத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் அதே தினத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தங்களின் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கொழும்பு மற்றும் கண்டி போன்ற மாகாணங்களுக்கு அனுப்பிவைத்து அவர்களின் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதற்காக மூன்று அல்லது நான்கு தினங்கள் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமையில் இருந்து வந்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் இக்குறையை போக்கும் நோக்குடனேயே இந்த மெடி சிலோன் மருத்துவ ஆய்வுகூடத்தை இன்று திறந்து வைத்துள்ளோம் என்று நிறுவனத்தின் பணிப்பாளர் இந்தியா கேரளாவைச் சேர்ந்த பாவு சர்மா மேலும் தெரிவித்தார்.
-அபு அலா-
Previous Post Next Post