அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதிகளை திரும்பி அனுப்பாமல் முழுமையாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு திணைக்களத் தலைவர்களுக்குரியது – பிரதி அமைச்சர் ஹரீஸ்

நல்லாட்சி அரசின் கொள்கைக்கு அமைவாக குறித்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி அவ்வருடத்திற்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் திரும்பிப் போவதையோ அல்லது அரைகுறையாக செலவு செய்கின்ற நிலைமையோ ஏற்படாமல் அந்நிதிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் திணைக்கள தலைவர்களுக்கு உரியதாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 
கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று (17) திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், கே.எம். அப்துல் றசாக், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ராஜதுரை உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,

நல்லாட்சி அரசின் கொள்கைக்கு அமைவாக குறித்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி அவ்வருடத்திற்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே இது தொடர்பாக அந்தந்த திணைக்கள தலைவர்கள் ஒப்பந்தகார நிறுவனங்களை தெளிவுபடுத்தி தங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்வதற்கான முயச்சியினை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிப் போவதையோ அல்லது அரைகுறையாக செலவு செய்கின்ற நிலைமையோ ஏற்படாமல் அந்நிதிகளை முழுமையாக பயன்படுத்தி மக்களை பயன்பெறச் செய்யும் முழுப் பொறுப்பும் திணைக்கள தலைவர்களுக்கு உரித்தானதாகும். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் நல்லாட்சியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறுபட்ட அமைச்சுகள் மற்றும் மாகாண சபை என்பவற்றின் ஊடாக பெருமளவிலான நிதி எமது பிரதேசத்திற்கு இந்தவருடம் ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நகர திட்டமிடல்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. அந்த வகையில் கல்முனை புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக அரச அதிகாரிகள் மட்டத்திலும் சமூக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகளுடனும் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இதற்கென காணிகள் சுவீகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இப்பாரிய வேலைத்திட்டத்தை திறன்பட விரைவாக மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மேலும் கல்முனை வர்த்தக மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதனால் பிரதான வீதிக்கு சமாந்தரமாக வீதி ஒன்றை அமைப்பதற்காக நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வயல் பிரதேசத்தை அண்மித்து காணப்படும் வண்ட் வீதியை விஸ்தரித்து அதனையும் பிரதான வீதியாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் உள்ளிட்ட குழு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்கும் வகையில் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கல்முனை சாஹிபு வீதியில் அமைந்திருந்த ஆயுள்வேத வைத்தியசாலை கல்முனை மாநகர சபையின் கீழ் காணப்படுவதனால் மாகாண அமைச்சினால் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இவ்வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மாகாண சபைக்கு கையழிப்பது.

கல்முனை பிரதேசத்தில் காணப்படும் பிஸ்கால் காணியின் உரிமம் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் மாநகர சபைக்கு காணப்படுகின்றபோதிலும் மாநகர சபை இன்னும் அக்காணியினை கையேற்காத நிலை காணப்படுகின்றது. எனவே இது தொடர்பான பூரண அறிக்கையினை கல்முனை மாநகர சபை கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் அரச பொதுக் கட்டடங்களை இக்காணியில் நிர்மாணிப்பதற்கு வழிவகுக்கப்படவுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய சகல வீதிகளையும் அபிவிருத்தி செய்யும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக விஷேட கலந்துரையாடல் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபை என்பவற்றின் உயர் அதிகாரிகளுடன் மேற்கொள்வது.

கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்துக் கணிப்பு பெறப்பட்டதோடு திணைக்களங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்கள் பணி தொடர்பான முன்னேற்ற அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  அத்தோடு பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக துரிதமாக செயற்பட்டு அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என திணைக்கள அதிகாரிகளுக்கு  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.


-அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாஸீன்-
Previous Post Next Post