Top News

மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக எஸ்.எல் தாஜூத்தீன் நியமனம்

அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 1964 ஆம் ஆண்டு பிறந்த சுலைமாலெவ்வை தாஜூத்தீன் தனது ஆரம்பக் கல்வியை அல்-முனீரா  உயர் பாடசாலையிலும், உயர் கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும் கற்றார்.
தனது பாடசாலை பராயத்தில் விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் மெய்வல்லுநர் போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டி பதக்கங்களையும் சான்றுதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

விளையாட்டுத்துறையோடு அதிக ஆர்வமும் திறமையும் கொண்ட அவர் 2000ஆம் ஆண்டு வட,கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினூடாக ஒரு விளையாட்டு உத்தியோகத்தராக கடமையேற்றார்.

தான் பிறந்த மண்ணில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென என்னியிருந்த வேளையில் அவரக்கு முதல் நியமனம் அவருடைய சொந்த ஊரிலே சேவையாற்ற கிடைத்தது.

2015 பெப்ரவரி 09ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சுமார் 15 வருடகாலமாக விளையாட்டு உத்தியோகத்தராக பணியாற்றினார்.
அவருடைய சேவைக் காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரும்பாடுபட்டார்.

அது மட்டுல்லாமல் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களை புனரமைத்து விளையாட்டு வீரர்களுடனும் நன்றாகப் பழகினார். அப்போது வீரர்களுக்கு சிறந்த பயிற்ச்சிகளை வழங்கி பல சாதனையாளர்களையும் உருவாக்கினார். குறிப்பாக 200 மீற்றர் ஓடு பாதை கொண்ட அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தினை 400 மீற்றர் ஓடு பாதையாக விஸ்தரித்து அம்மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அதிகாரிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் இணைந்து பல பங்களிப்புக்களைச் செய்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நீண்டகாலம் பணியாற்றிய விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல் தாஜூத்தீன் அப்பிரதேசத்தில் பெருமளவிலான உடற்கல்வி ஆசிரியர்கள் உருவாகுவதற்கும், விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரகாசிப்பதற்கும் காரணகருத்தாகவிருந்தார்.

அதிலும் குறிப்பாக பல விளையாட்டு வீரர்கள் இலங்கை இராணுவ விளையாட்டுப் பிரிவில் இணைந்து பயிற்ச்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. விசேடமாக 2012-2014 காலப்பகுதியில் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏ.ஆர் ரஜாஸ் கான் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்டினார். அதே போன்று 2009-2010 காலப்பகுதியில் நீளம் பாய்தல் போட்டியில்  எம்.ஐ.எம் மிப்ரான் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டி பல விருதுகளையும் பெற்றுக்கொண்டார். ஈட்டி எறிதல் போட்டியில் ஐ.எல் தௌபீக் மற்றும் ஜே.ஏ நுஸ்ரி ஆகியோர் மாகாண சாதனையாளர்களாகவும் பிரகாசித்தனர்.

இவர்களின் சாதனைக்கு விளையாட்டு உத்தியோகத்தர் தாஜூத்தீன் சகல விதத்திலும் பயிற்ச்சிகளை வழங்கி உதவிபுரிந்தார்.
அவர் தனது கடமையுடன் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துடன் நின்றவிடாது பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம் அஷ்ரப், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட்.ரீ.எம் ஆசிக் ஆகியோருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி இலங்கை இராணுவ விளையாட்டுப் பிரிவில் இணைப்பதற்கும் உதவியாகவிருந்தார்.

நீண்டகாலமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய அவர் 2015 பெ;ரவரி 10 ஆம் திகதி முதல் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு 2015 ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை சேவையாற்றினார்.

அக்காலப்பகுதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பதில் விளையாட்டு உத்தியோகத்தராகவும் கடமைபுரிந்தார். அச்சந்தர்ப்பத்திலும் கூட அப்பிரதேச விளையாட்டுத்துறைக்கும் அரும்பங்காற்றினார்.

இவர் 2015 ஒக்டோபர் 21ஆம் திகதி மத்திய அரசின் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக  தெரிவாகி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடமிருந்து அண்மையில் நியமனக்கடிதத்தினையும் பெற்றுக்கொண்டார்.

 தற்போது அம்பாரை மாவட்ட செயலத்தில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக  கடமைபுரிந்து வருகின்றார் இவருடைய சேவை அம்பாரை மாவட்ட விளையாட்டு வீரர்களக்கு இன்றியமையாதாகும்.
-றியாஸ் ஆதம்-
Previous Post Next Post