செல்லக் குறும்பு

வேலை செய்ய விடமாட்டாள்
விளையாடக் கூப்பிடுவாள்
தலை மட்டும் மறைத்து
தன்னைத் தேடு என்பாள்
பலதையும் இழுப்பாள்
பரத்திச் சிரிப்பாள்
அழுது சாதிப்பாள்
அன்பைப் போதிப்பாள்
தொலை பேசி வந்தால்
தொடவும் விடமாட்டாள்
ஹலோ என்று சொன்ன பின்பே
கதைக்கத் தந்திடுவாள்

தலைவாரக் கூப்பிட்டால்
தரமாட்டேன் என்பாள்
அழகாக டோலுக்கு
அவள் வாரிடுவாள்

சத்துள்ள உள்ள உணவை
சட்டென்று மறுத்திடுவாள்
ஒத்துக்காத உணவை
உடனே உண்டிடுவாள்

நித்திரை கொண்டால்
நெஞ்சில் ஏறி இருந்து
கத்துவாள் கண்ணை
கரத்தால் திறந்திடுவாள்
சத்தம் போடாது
சைலண்டாய் இருந்தால்
எதனையோ இழுத்து
இருப்பதாய் அர்த்தம்

இத்தனை வேலையும்
இதற்கு மேலேயும்
அத்தனை சின்னதும்
அவரவர் வீட்டில்
நித்தமும் செய்கின்றார்
நிறைவான மகிழ்விதுவே.
-காத்தான்குடி நிஷவ்ஸ்-
Previous Post Next Post