Top News

மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC 45ஆயிரம் வாக்குகளைப்பெறும்- கிழக்கு மாகாண முதலமைச்சர்

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ( 45,000) நாற்பத்தி ஐந்து ஆயிரம் வாக்குகளைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தைக் கைப்பற்றும் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்:

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும், வன்னி மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இம்முறை 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எடுத்து இரண்டாம் நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் வரும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் முகவரி பெற்றவர்கள் இன்று அக்கட்சியை தோற்கடிக்க கனவு காண்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடபெறாது என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊரில் வீதிகளில் ஈச்சை மரங்களை நாட்டி அதுதான் சேவை என்று நினைக்கிறார்கள். சேவை என்பது எது என்று தெரியாதவர்கள் எல்லாம் சேவகளைச் செய்யாமல் என்னவெல்லாம் சேவைகள் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று மக்கள் அபிவிருத்தியில் மிகமோசமாக பிந்தள்ளப்பட்டு பொருளாதாரப்பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே இலங்கைத் திருநாட்டில் இன்று சமாதானம் மேலோங்கி சிறந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பங்காளிக் கட்சியாக உருவெடுத்து சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை சிறப்புற நிறைவேற்றிக்கொடுத்து சிறப்பு சேவை செய்து கொண்டு வருகிறது. அதற்காக அனைவரும் கைகொடுத்து உதவ முன்வாருங்கள் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிச் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வு ஏறாவூர் குல்லியது தாறுல் உலூம் அறபிக் கல்லூரியில் இடம்பெற்றது. நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழுக்கள் கலந்து கொண்டமை குரிப்பிடத்தக்கது.


Previous Post Next Post