ஏ.எச்.எம். பௌசி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்க தீர்மானித்துள்ளமைக்கு எதிராக ஏ.எச்.எம்.பௌசி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாகக் குற்றஞ்சுமத்தி எவ்வித ஒழுக்காற்று விசாரணைகளும் இன்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே தான்  அடிப்படை உரிமை மீறல்  மனு  தாக்கல் செய்திருப்பதாக பௌசி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சுமத்தியே என்னை சுதந்திர கட்சியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனை ஊடகங்கள் ஊடாகவே அறியக்கிடைத்தது.

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு ஊடாக தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் என்னிடம் எதுவித ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன, அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிக்கும் 6 பேரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

எந்தவொரு ஒழுக்காற்று விசாரணையையும் நடத்தாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது. எனவே இந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கின்றேன் என்றார்.
-VK News-
Previous Post Next Post