பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்கள் சந்திப்பு

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்கள், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்ட இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் தலமையில்  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை சந்தித்துள்ளனர். 
இதன் போது பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவுகின்ற தளபாட பற்றாக்குறை தொடர்பில் பேசப்பட்டதுடன், கிழக்கு மாகாண சபையின் இவ்வாண்டுக்கான நிதியிலிருந்து பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் வேண்டப்பட்டது. 

அத்துடன் பொத்துவில் பிரதேசத்தில் ஓரேயொரு பெண் பாடசாலையாக அல்-இர்பான் மகளிர் பாடசாலை காணப்படுகின்றது. இப்பாடசாலையில் தற்போது அதிகளவான பெண் மாணவிகள் சேர்க்ப்படுவதால் வகுப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதற்காக இப்பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடமும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் வேண்டப்பட்டது.

மேலும், 
பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் பின்தங்கி வாழுகின்ற பிரதேசங்களை கிழக்கு மாகாண சபையின்  நிதியின் மூலம் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் வேண்டப்பட்டது. முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் நிதியின் மூலம் பசறிச்சேனை பிரதேசத்தில் மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் அவ்வரங்கு இயற்கை சீற்றம் காரணமாக மேற்கூரைகள் காற்றின் வேகத்திற்கு பறந்து விட்டது. பசறிச்சேனை பிரதேசத்தில் காணப்படுகின்ற ஒரேயொரு பொது மைதானமாக இது காணப்படுகின்றது. எனவே, இப்பிரதேச இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இப் பார்வையாளர் அரங்கை புனர்நிர்மாணம் செய்து தரும்படியும், பொத்துவில் பிரதேசத்தில் காணப்படுகின்ற வீதிகளை புனரமைத்துத் தரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உப அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது. அது கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்துடன் கடந்த வருடம் முழுமையான ஓர் மாகாண நீர்ப்பாசனப் பொறியிலாளர் அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டது. ஆனால் இவ்வலுவலகம் தற்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாதுள்ளது. 

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும்படியும் கேட்கப்பட்டது. மேலும் இக்குறித்த அலுவலகத்திற்காக அரச காணியொன்றில் நிதியொதுக்கப்பட்டது அத்திவாரமிடப்பட்ட நிலையிலுள்ளது. அதன் பின்னர் எவ்வித நிதியொதுக்கப்டாமல் அவ்வாறே காணப்படுகின்றது. எனவே இதனை நேரடி விஜயம் செய்து பார்வையிட்டு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்திற்கு புதிய நிரந்தர கட்டிடம் ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் படியும், பொத்துவில் பிரதேசத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நடமாடும் சேவையொன்றை நடாத்தி மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்கும் படியும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களினால் எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொத்துவில் தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பொத்துவில் பிரதேசத்திற்கு மிக விரைவில் வருகை தரவுள்ளதாகவும், பொத்துவில் மக்களின் நீண்ட காலமான பிரச்சினைகள் பற்றி தான் நன்கறிந்துள்ளதாகவும், காணிப் பிரச்சினை தொடர்பில் மிக விரைவில் நடமாடும் சேவையொன்றை நடாத்த ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.பதுர்கான ஆசிரியர், பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியின் அதிபர்.எச்.ஆர்.எம்.ஹலீல், யூவைரியா அறபுக் கல்லூரியின் தலைவர் எம்.சீ.நசுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-MSSH-

Previous Post Next Post