மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டது – நாமல் ராஜபக்ஸ

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 29-04-2017ம் திகதி சனிக்கிழமை மே தின கூட்டம் தொடர்பிலான மக்கள் சந்திப்பின்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் :

சில  மாதங்களுக்கு முன்பு அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பன்சலை ஒன்றை கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இவ்வாறான சம்பவங்கள்  நிகழும் போது முஸ்லிம்களால் எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இனவாத நிகழ்ச்சி நிரல்களின் பின்னால் நாம் இல்லை என்பதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நாம் வாய் மூடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதோடு இதனை இன்னும் கிண்டி விட்டால் சிறந்த அரசியல் அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும்.இருந்தும் இந்த இழி அரசியல் செய்ய எமக்கு விருப்பமில்லை.

இலங்கை நாட்டில் ஞானசார தேரரின் ஆட்டம் அதிகமாக காணப்படுகிறது. எமது ஆட்சிக் காலத்தில் அவர் இந்தளவு துள்ளித் திரியவில்லை. இவ்வாட்சி அமைந்து சில வருடங்களிலேயே பல தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யானை குட்டியொன்றை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த யானை குட்டியை அவர் அழகிய முறையில் தான் பார்த்துக்கொண்டார். இவ்வரசுக்கு இவர்களை எல்லாம் கைது செய்ய முடிந்த போதும் ஞானசார தேரரை மாத்திரம் கைது செய்ய தயங்குவேதேன்?  தேரர்கள் விடயத்தில் இவ்வரசு மதத்தை கற்றவர்கள் என்ற வகையில் மென்மையாக நடந்து கொள்வதானால் யானைக் குட்டியை வைத்திருந்த உடுவே தம்மாலோக தேரர் விடயத்திலும் அவ்வகையில் நடந்திருக்க வேண்டுமே. ஞானசார தேரர் விடயத்தில் இவர்கள் நீதியை கடைப்பிடிக்காமையின் பின்னால் வேறு நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன.

இறக்காமத்திலே புத்தர் சிலை, பன்சலை அமைக்க வேண்டிய தேவை இருந்தால், அது சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதால் அவைகள் அழகிய முறையில் கையாளப்பட வேண்டும். இலங்கையில் பௌத்த மக்களின் அங்கீகாரம் பெற்ற உயரிய சபைகள் உள்ளன. அவைகள் தான் இவ்வாறான விடயங்களில் தலையிட வேண்டுமே தவிர முகவரி அற்றதும் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டதுமான பொது பல சேனாவல்ல .மீண்டும் இறக்காமத்திற்கும் அக்கரைப்பற்று பன்சலைக்கும் பொது பல சேனா வரவுள்ளதாக அன்று கூறியதாகவும் அறிய முடிகிறது. பொது போல சேனாவின் செயற்பாடுகள் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைவதால் அவர்கள் இப் பிரதேசங்களுக்கு செல்வது அவ்வளவு உகந்ததல்ல. இதனை இவ்வரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது வரையில் அக்கரைப்பற்று பன்சலையில் எந்த பிரச்சினையும் எழுந்தாதாக அறியவில்லை. அங்கு இவர் செல்வதன் மூலம் தான் பிரச்சினைகள் எழப் போகின்றன.

தற்போது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களை சம்மதிக்க வைக்க திட்டமாகவுமிருக்கலாம். சிறுபான்மையின தலைவர்கள் சிலரது செயற்பாடுகளை பார்க்கின்ற போது அவ்வாறான சந்தேகங்களும் எழுகின்றன. இது மாத்திரமல்ல மிக விரைவில் தேர்தல் வராலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்கள் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து அதற்கு தீர்வு வழங்குவது போன்று நடித்து முஸ்லிம்களை தங்கள் பக்கம் ஈர்க்க முயலலாம்.இது இவ்வரசு ஏதோ ஒரு அரசியல் நோக்கம் கொண்டு திட்டமிட்டு செய்கின்ற விடயம் என்பதில் ஐயமில்லை.
Previous Post Next Post