இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு உப வலயக் கல்வி அலுவலகம் பொத்துவில் தான்-பொத்துவில் உப வலயக் கல்வி அதிகாரி என்.பீ.வஹாப்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட  பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகம்தான் இலங்கையிலிருக்கின்ற ஒரேயொரு உப வலயக் கல்வி அலுவலகமாகும் என பொத்துவில் உப வலயக் கல்வி அதிகாரி என்.பீ.வஹாப் தெரிவித்தார்.
அன்மையில் பொத்துவில் நன்னோக்கு அமைப்பினால் குருபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் எம்.எல்.கலந்தர் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நாற்பத்து மூன்று மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்

கடந்த 2014-02-12ம் திகதி மத்திய மாகாண அமைச்சர்கள் அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் வருகைதந்து எமது உபவலயக் கல்வி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டபோதும் இற்றைவரைக்கும் அது வலயக்கல்வி அலுவலகமாக தரமுயர்த்தப்படாமல் இருப்பதும் ஒருபடி மேலே சொன்னால் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை ஏற்றுக்கொள்;ள முடியாதிருப்பதும் வேதனை அளிக்கின்றது.

கடந்த பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எமது உயரதிகாரியினால் பொத்துவில் உப வலயம் என்று ஒன்றில்லையென கூறப்பட்டது எமது மாணவர்களுக்குச் செய்கின்ற துரோகமாகும்.

பொத்துவில் உப வலயப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமான பிரேரனைக்கு பிரஸ்தாபிக்கப்பட்ட அறிக்கையினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு பொய்யான அறிக்கையாகும்.
2014-08-12ம் திகதி எமது உப வலயக் கல்வி அலுவலகம் தரமுயரத்தப்பட்டது. நடைமுறையில் உப வலயமென்பது ஒரு வருடத்திற்குள்  வலயமாக தரமுயர்த்தப்படும். அவ்வாறு கிண்ணியா – கோமரங்கடவல – மட்டக்களப்பு மேற்கு போன்ற உப வலயங்கள் தரமுயர்த்தப்படும்போது பொத்துவில் உப வலயத்தை தரமுயர்த்த முடியாமல் இருப்பதானது இலங்கையில் ஒரேயொரு உப வலயக் கல்வி அலுவலகம் இருப்பதற்குச் சான்றாகும்.

இவ்வாறு அரசியல் வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளால் திறந்துவைக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்ட உப வலய அலுவலகத்தை அக்கரைப்பற்று வலயக் கல்வி அதிகாரி நிராகரித்துவிடுவதென்றால் அரசியல்வாதியெனும் நீங்கள் யார்? நாங்கள் யார்? ஏன் எங்களை இவ்வாறு ஏமாற்றுகின்றீர்கள்? மத்தியிலும் நாங்கள்தான் மாகாணத்திலும் நாங்கள்தான் பிரதேசத்திலும் நாங்கள்தான் எனும் அரசியல்வாதிகள்  இதுவிடயத்தில் நடவடிக்கையெடுக்க முடியாதென்றால் எங்களை விட்டுவிடுங்கள்.
நாங்கள் பழையபடி கோட்டக்கல்வி அலுவலகமாகவே இயங்கிடுகின்றோம்.
இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை வளப்பங்கீடுகளில் தொடர்ச்சியான ஏமாற்றங்கள் போன்ற எத்தனையோ விடயங்களில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என்பது வேதனையளிக்கின்றது. இந்த நிலையிலும் எங்களுடைய மாணவர்கள் சித்தியடைந்திருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது எனத்தெரிவித்தார்.
-மரியமின் புத்திரன்-

Previous Post Next Post