குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைக்க மாகாண சபையில் தீர்மானம் கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தென் மாகாணத்தில் மாத்தறை நகரிலும், மத்திய மாகாணத்தில் கண்டி நகரிலும், வட மாகாணத்தில் வவுனியா நகரிலும் பிராந்திய காரியாலயங்கள் அமைத்து மாகாண மட்டத்தில் கடவுச் சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதனால் மேற்குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் பெரும் நன்மை அடைந்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண மக்கள் தங்களின் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்காக கொழும்பு நகருக்கு நீண்ட தூரம் பிரயானம் செய்து பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் மத்திய மாவட்டமாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் காரியாலயத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும், கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும், மத்திய அரசாங்க உள்நாட்டு அலுவல்கள் , வட மேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன அவர்களையும் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் 65வது சபை அமர்வு பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் (27) நடைபெற்றது.

இத்தனிநபர் பிரேரணையில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பணிமனையினையும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பணிமனையினையும் நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிழக்கு மத்தியாக திகழும் மட்டக்களப்பு நகரில் இயங்க வைத்தோம்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டகளப்பு நகரில் அமைப்பதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைக்க ஏகமானதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


-எம்.ஜே. எம். சஜீத்-
Previous Post Next Post