பிரார்த்தனையினாலும், ஒற்றுமையினாலுமே நமது சமூகத்தைப் பாதுகாக்க முடியும் கிண்ணியாவில் றிசாத்..

முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார  தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை (01) கிண்ணியாவில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கடந்த சில வருடங்களாக ஞானசார தேரர் வேண்டுமென்றே முஸ்லிம்களை தூசித்தும், புனித குர்ஆனையும், பெருமானாரையும் நிந்தித்து வந்தவர், இப்போது அல்லாஹ்வையும் இழிவுபடுத்தத் தொடங்கியுள்ளார்.

அளுத்கமயில் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர்களையும், பல்லாயிரம் பில்லியன் பெறுமதியான உடைமைகளையும் அழித்ததற்கு உடந்தையாக செயற்பட்ட தேரர், இன்னும் தனது இழிவான செயலை நிறுத்தியதாகத் தெரியவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பில் தேரருக்கு எதிராக 41 முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், எந்தவொரு முறைப்பாடும் விசாரிக்கப்படவுமில்லை, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.

மஹியங்கனையில் இடம்பெற்ற சம்பவத்தைக் காராணம் காட்டி, அங்கு சென்று இஸ்லாத்தை மிக மோசமாக விமர்சித்தார். அவரது செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில், பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்த முறைப்பாட்டின் வெளிப்பாடாகவே, அல்லாஹ்வையும், பெருமானாரையும் இழிவுபடுத்தியுள்ளார். அவரது செயற்பாடுகளால் இன்று உலகில் வாழும் கோடான கோடி முஸ்லிம்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இஸ்லாம் வன்முறை மீது விருப்பம்கொண்ட மார்க்கம் அல்ல. முஸ்லிம்கள் எப்போதும் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புபவர்கள். மற்றைய இனங்களுடன் பரஸ்பரம் அன்புடனும், நல்லுறவுடனும் பழகுபவர்கள். தாய்நாட்டுக்கு விசுவாசமாகா வாழ்ந்த இந்த மக்கள் மீது, இனவாதிகள் தொடர்ந்தும் தங்களது வக்கிரப்புத்தியைக் காட்டி வருவதுதான் வேதனையானது.

நல்லாட்சி உருவாகும்போது உறுதியளிக்கப்பட்ட மத நிந்தனைச் சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருமாறு அரசுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அதன் மூலம் இவ்வாறான இனவாதிகளின் கொட்டங்களை அடக்கமுடியும் என ஓரளவு நம்புகின்றோம்.

புனித ரமழான் காலத்தில் இறுதிப் பத்தில் நாம் இருந்துகொண்டு இருக்கின்றோம். எம்மிடம் எத்தகைய பேதங்கள் இருந்தாலும், அத்தனையையும் சுருட்டி வைத்துவிட்டு, இஸ்லாத்துக்கெதிரான சவால்களை முறியடிக்க ஒன்றுபடுவோம். நாம் ஒன்றுபடுவதன் மூலமே இவ்வாறான சக்திகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்.
இன்று உலகளாவிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். உலகில் சுமார் 49 முஸ்லிம் நாடுகளில் குண்டு வெடிப்புக்களும், இரத்தக்களரியும் இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்களை அழிப்பதற்கு மேலேத்தேய சக்திகள் கங்கணம்கட்டி வருகின்றன. அண்மையில் துருக்கி விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரிய சான்று. உலக முஸ்லிம்களின் நலனில் துருக்கி நாடும், துருக்கித் தலைவரும் அதிகம் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கூற விளைகின்றேன்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகான ஒற்றுமை மூலமும். பிரார்த்தனை மூலமும் வழிகாண முடியும் என நான் நம்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எம்.பிக்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், நவவி, கிண்ணியா முன்னாள் நகரபிதா டாக்டர். ஹில்மி மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்வி, கலாச்சாரப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி மற்றும் கிண்ணியா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-சுஐப் எம்.காசிம் -
.
Previous Post Next Post