கல்முனை நகர அபிவிருத்திற்கு பிரதமரினால் நிதி ஒதுக்கீடு – பிரதி அமைச்சர் ஹரீஸ்

கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இன்று (12) வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

இதன்போது கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 29 கிராம சேவக பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்;டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,

நாட்டிலுள்ள பிரசித்த பெற்ற நகரங்களைப் போல் பல்லினங்கள் வாழும் கல்முனை நகரம் சகல வசதிகளுடன் கூடிய நகரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கல்முனை மாநகர அபிவிருத்தி எந்த ஒரு சமூகமும் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டம் சம்பந்தமாக தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளோம்.

கல்முனை நகர அபிவிருத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை பிரதமர் ரணில்  விக்கிரம சிங்க நகர திட்டமிடல் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்கான மேலதிக நிதிகளை பெற்றுக்கொள்வதற்காக எமது கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் துருக்கி நாட்டு வர்;த்தக தூதுக் குழுவுடன் நேற்று முந்தினம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் ஓரிரு வாரங்களில் துருக்கி நாட்டுடன் கைச்சாத்திடப்படவுள்ளது.

கல்முனை பிராந்திய மக்கள் எதிர்நோக்கும் நீர் வழங்கல் பிரச்சினைகள் மற்றும் நீர் வழங்கல் பட்டியலில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பிரச்சினைகளை தங்களது காலடியில் தீர்த்துக் கொள்ளும் முகமாக கல்முனை பிரதேசத்தில் நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒன்றினை திறப்பதற்கான நடவடிக்கையினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூக் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார். இக்காரியாலயத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவருக்கு அமைச்சர் பணிப்புரையினையும் விடுத்துள்ளார் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post