நாம் வெள்ளையென்றால் ”அது கறுப்பு” என்று கூறுகிறார்கள், வடக்கு அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சிக்கல்களை கூறுகிரார் ரிஷாட்.

வவுனியா மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களான  அண்ணா நகர், தெற்கிலுப்பைக்குளம், பாரதிபுரம், சமயபுரம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், கல்மடு போன்ற தமிழ் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் கடந்த சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்தக் கிராம மக்களை அவரவர் இடங்களில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார்.

அமைச்சர் கூறியதாவது,

கடந்த காலங்களில் நான் இந்தப் பிரதேச மக்களுக்கு முடிந்த வரையில் உதவியுள்ளேன். என்னாலான பணிகளை மேற்கொண்டுள்ளேன். யுத்த காலத்தில் நீங்கள் பட்ட அவஸ்தைகளை நான் நேரில் கண்டவன். யுத்தக் கொடூரங்களால் வெளியேற்றப்பட்டு வவுனியா மெனிக் பாமில் தஞ்சமைடைந்திருந்த மக்களுக்கு அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த நான் எவ்வாறு உதவினேன் என்று உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.
தேர்தல் காலங்களில் எனது வெற்றிக்காகவும் நான் சார்ந்த கட்சியின் வெற்றிக்காகவும் உங்களில் பலர் உதவியுள்ளீர்கள். அந்த நன்றியை நான் மறக்கமாட்டேன். அதற்காக எனக்கு உதவியவர்களுக்கு மட்டும் நான் உதவி செய்வேன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இனமத பேதமின்றியே நான் பணியாற்றியுள்ளேன்.

எமது கட்சியில் வடமாகாண சபையில் ஒரு சிங்கள சகோதரர் பணியாற்றுகின்றார். அதே போன்று வவுனியா மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளில் எமது கட்சியில் போட்டியிட்ட தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

யுத்தம் எல்லோரையும் வாட்டியிருக்கின்றது. முல்லைத்தீவு முற்றாக அழிந்து கிடந்தது. அங்குள்ள எந்தப் பாடச்சாலைகளிலும் கூரைகள் இல்லாத நிலை இருந்தது. வீதிகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. அமைச்சராக இருந்ததனால் அரசின் உதவியுடன் இந்தப் பிரதேசத்தைக் கட்டியெழுப்ப பாடு பட்டிருக்கின்றேன். இனமத பேதமின்றி பணியாற்றியிருக்கின்றேன்.
தற்போது நான் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிலர் கறுப்புக் கண் கொண்டு பார்க்கின்றனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் வவுனியாவில் மைய நிலையமான ஓரிடத்தில் பொருளாதார மத்திய நிலையமொன்றை அமைத்து இங்கு வாழும் மக்களும் அயற்கிராம மக்களும் நன்மைய்டையக் கூடிய வகையில் திட்டமொன்றை கொண்டுவந்துள்ளோம். அதற்குரிய காணி இணங்காணப்பட்டு வவுனியா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இது தொடர்பில் ஏகமனதான தீர்மானமொன்றை நிறைவேற்றினோம்.

இங்குள்ள விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் சிறந்த பயனை வழங்கக் கூடிய இந்தப் பொருளாதார மையத்தை அங்கு அமைக்க வேண்டாமென்று வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இதில் எத்தகைய உள் நோக்கம் இருக்கின்றதென்று எனக்குத் தெரியாது. இவ்வாறு பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசுக்கு சில பிரச்சினைகள் உண்டு. நாம் வெள்ளையென்று கூறும்போது அவர்கள் கறுப்பு என்று கூறுகிறார்கள். இந்த விடயங்களை உங்கள் சிந்தனைக்கு நான் விட்டு விடுகின்றேன்.

இங்குள்ள பாதைகளை நான் கண்டபோது நான் வேதனையடைந்தேன். சில கிராமங்களுக்கு நான் இப்போது தான் முதன்முறையாக விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. கனத்த மழை பெய்தால் ஈஸ்வரபுர கிராமத்தையும் அதனை அண்டியுள்ள பல கிராமங்களையும் ஊடறுத்து செல்லும் பஸ் வண்டி இங்கு வராது என்று அந்த மக்கள் கூறினார்கள், இரண்டு மைல் தூரம் சென்று பிரதான பாதையில் பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமென்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் கிராமத்திற்கு செல்லும் பாதை விடயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை இருக்கின்றது. எனினும் அதற்காக நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறு கஷ்டப்படவும் கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான இலங்கைப் புடவைக் கைத்தொழில் நிலையத்தின் கீழ் நடத்தப்பட்ட யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

இந்த விஜயத்தில் அமைச்சருடன் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, தேசிய வடிவமைப்பு தலைவர் சட்டத்தரணி மில்ஹான் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகமது, அப்துல் பாரி, மகளிர் அணி இணைப்பாளர் ஜிப்ரியா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
-சுஐப் எம் காசிம்-
Previous Post Next Post