மொபைல் இன்டர்நெட் வேகம் குறைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்

மொபைல் போனில் இணைய இணைப்பினை மேற்கொள்கையில் பல வேளைகளில் தேவைப்படும் இணைய தளம் இறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
 இதே நிலையே வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் இருக்கும் என கூகுள் கணக்கிட்டுள்ளது. இந்தியாவுடன் பிரேசில் இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் கூகுள் கணக்கில் கொண்டுள்ளது.

எனவே இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய செயலி ஒன்றை விரைவில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதனை கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்களை வடிவமைக்கும் பிரிவின் நிர்வாகி ஹிராட்டோ டொகுசே தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த செயலியைத் தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துவிட்ட பின்னர் இணைய இணைப்பு செயல்பாட்டில் புதிய வேகத்தினைப் பயனாளர்கள் உணர்வார்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்கனவே சோதனை செய்து பார்த்ததில் 2ஜி இணைப்பில் கூட இந்த செயலி இணைய வேகத்தை 4 மடங்கு அதிகம் தந்ததாகத் தெரிகிறது.
வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைப்பினைத் தரும் முயற்சிகளையும் கூகுள் எடுத்து வருகிறது.

இதன் Project Loon என்னும் திட்டத்தின் கீழ் மிக அதிக உயரத்தில் இணைய இணைப்பு தரும் சர்வர்கள் கொண்டுள்ள பலூன்கள் பறக்கவிடப்பட்டு அதன் வழியாக இணைப்பு தரப்படும்.
இந்த பலூன்கள் ஒரு நெட்வொர்க்காகச் செயல்படும். பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில் stratosphere  என அழைக்கப்படும் வளி மண்டலத்தில் இவை அமைக்கப்படும்.

அடுத்த ஆண்டு வாக்கில் இவை இந்தியாவில் அமைக்கப்படலாம் என கசிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைய இணைப்பினை வேகமாகத் தரும் முயற்சியில் ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் லைட் என்ற செயலியைத் தந்துள்ளது. அத்துடன் கூகுள் நிறுவனமும் தற்போது புதியதாக இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.
Previous Post Next Post