கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒன்றிணைத்து புதிய கல்முனை மத்திய கல்வி வலயம் அமைக்க கோரிக்கை

கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயம் இரண்டிலும் உள்ள தமிழ் பாடசாலைகளை ஒன்றிணைத்து புதிய கல்முனை மத்திய கல்வி வலயம் ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறுகோரி தமிழ் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மாகாண சபையின் 47வது அமர்வின்போது தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபையின் 47வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (20) தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இடம்பெற்றபோது  மு.இராஜேஸ்வரன் தனது தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கல்முனை கல்வி வலயத்தில் 22 தமிழ் பாடசாலைகளும், சம்மாந்தறை கல்வி வலயத்தில் 32 தமிழ் பாடசாலைகளும் இந்த இரண்டு வலயத்தில் மொத்தமாக 54 தமிழ் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் 16,785 தமிழ் மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 1108 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவம் இந்நிலைமையில் இப்பாடசாலைகளில் நிர்வாக ரீதியாக பௌதீக வளப்பங்கீடு, ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஏனைய விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகின்றது என்று கூறினார்.

மேலும், இப்பாடசாலைகள் யாவும் அபிவிருத்தி செய்யப்படவேண்டுமாக இருந்தால் இவ்வனைத்துப் பாடசாலைகளையும் ஒன்று சேர்த்து தனியான ஒரு கல்வி வலயம் உருவாக்கபடல்வேண்டும்.

அத்தடன் நிலத் தொடர்பற்ற வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக்கப்பட்டதைப்போன்று இவ் வலயத்தை உருவாக்க முடியும். தனியான ஒரு கல்வி வலயத்தை உருவாக்குவதற்குப் போதுமான பாடசாலைகளை அதாவது – 05 1AB பாடசாலைகள், 14 – 1C, பாடசாலைகள், 23 வகை – III பாடசாலைகள், 11 வகை – II பாடசாலைகள், 01 அ.த.க பாடசாலைகள் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பௌதீக வளங்களும் காணப்படுவதாக தனது தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து தமிழ் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.
-அபு அலா-
Previous Post Next Post