விஜயகலாவின் கருத்து தொடர்பில் குற்றவியல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விசாரணைகளை மேற்கொள்ள பொறுப்பளிப்பு பொலிஸ் ஊடக பேச்சாளர்



(புவி)

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் விடுதலை புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்  குற்றவியல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விடுதலை புலிகள் தாெடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரின் உரை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குற்றவியல் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் நேற்றுமுன்தினம் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இம் முறைப்பாடுகள் குறித்து பரிசீலனையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபரின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் மதியவேளையில் இவ்வாறு பொலிஸ் மா அதிபரினால் குற்றவியல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள பொறுப்பளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருப்பதாக சிங்ஹல ராவய, பிவித்துரு ஹெலஉறுமய மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய உண்மையை கண்டறியும் அமைப்பின் சார்பிலும் இவ்வாறு விஜயகாலா மகேஸ்வரனுக்கு எதிராக நேற்றுமுன்தினம் பொலிஸ் மா அதிபர் காரியாலத்தில் முறைப்பாடளித்திருந்தமை குறிப்பிடத்தது.

Previous Post Next Post