பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்தி குழு கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளனி, பௌதீக வளக் குறைபாடுகளை தீர்க்கும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாஹம மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.அன்சார் ஆகியோருடன் பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு நேற்று புதன்கிழமை (22) கிழக்கு மாகாண சபை ஆளுனர் அலுவலகத்தில் சந்திப்போன்றை மேற்கொண்டனர்.
குறித்த சந்திப்பில் வைத்தியசாலையில் காணப்படும் சிற்றூழியர் பற்றாக்குறை, தாதியர் மற்றும் ஏனைய மனிதவள ஆளனிகள் பற்றி கலந்துரையாடப்பட்ட போது பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு செயலாளரினால் உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், விஷேட வைத்திய நிபுணர்களின் தங்குமிட விடுதி வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது வாடகை அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் அதற்கான அனுமதியினைதான் வழங்குவதாகவும் ஆளுனரினால் வாக்குறுதியளிக்கபட்டது.
மேலும், இங்கு ஆளுனர் கருத்துத் தெரிவிக்கையில் பொத்துவில் ஆதாரவைத்தியசாலைக்குமிகவிரைவில் நான் அல்லது எனது பிரதிநிதிகள் விஜயம் செய்வோம் எனவும் கருத்துத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாஹம, சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.எச்எம்.அன்சார், பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டீ.எல்.மனாப், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன் மற்றும் அபிவிருத்திக் குழு உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post