சாய்ந்தமருது டி.எஸ்.சலீம் சவால் கிண்ணத்தை ஏ.டி.பி அணி சுவீகரித்தது

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மக்களுக்கு வழங்கிய உன்னத சேவையை கௌரவிக்கும் முகமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் டி.எஸ்.சலீம் சவால் கிண்ண முக்கோண கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் வியாழன் (02), வெள்ளி (03) ஆகிய தினங்களில் இடம்பெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், தலைமையிலான ஏ.டி.பி அணி, சமுர்த்தி (திவிநெகும) தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையிலான சமுர்த்தி அணி, உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையிலான ஏ.டி.எஸ் அணி ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.

அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஒவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட முக்கோண சுற்றுப்போட்டியில் மூன்று அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையான புள்ளிகளை பெற்றன. இறுதிப் போட்டிக்கு ஓட்டக் கணிப்பிற்கு அமைவாக சமுர்த்தி அணியும், ஏ.டி.பி அணியும் தெரிவாகியது.

இறுதிப் போட்டி சமுர்த்தி அணியை எதிர்த்து ஏ.டி.பி அணி மோதியது. இப்போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சமுர்த்தி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஏ.டி.பி அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை பெற்றன. இதில் ஏ.எம்.ஜஹான் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சமுர்த்தி அணி 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றன. இதில் ஏ.எம்.சலுபீன் 17 ஓட்டங்களையும், ஏ.எம்.சிபான் ஓட்டங்களையும் 16, ஏ.எம்.எம்.றியாத் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இச்சுற்றுப் போட்டியில் ஏ.டி.பி அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று டி.எஸ்.சலீம் சவால் கிண்ணத்தை சுவீகரித்து சுற்றுப்போட்டியின் சம்பியனானது.

இறுதிச் போட்டி நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், தொழிலதிபர் எம்.நாசர் உள்ளிட்டோர் கௌரவ அதிதியாகவும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை ஆகியோரின் சேவையினை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சுற்றுப்போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post