நீதி தோற்றிடும் நாட்டில் நாம்-கவிதை

நீதி தோற்றிடும் நாட்டில் நாம்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

காலநதி ஓட்டத்தில்
காகிதக் கப்பலாய் நாம்
மாறிவரும் உலகில்
மாறிடாத மனிதராய் 
சோரம் போகின்றோம்
ஏலம் போடுபவர்களிடத்தே

உழுதுண்டு வாழ்ந்த இடத்தில்
தொழுதுண்டு வாழும் நிலை
அடுத்தவன் காலடியில்
படித்தவன் பாமரன் என்றில்லை
எல்லாமே எடுபிடிகளாய்

வாசலில் நின்டாலும்
அவனுக்கு 500 போட்டால் தான்
வேலையாகுமாம்
ஏனெனில் ஆட்சி அவர் கையிலாம்.

கல்தோன்றாக் காலம் தோன்றிய
எம்மவர் 
வந்தேறியவர் என்றுரைக்கும்
குறநரிகள் கூட்டம் சில
பல் காட்டிப் பிழைப்பு நடத்தி
பல்தலையையும் கடனாளியாக்கிடும் முனைப்பு

அரியனை அமைத்திடக்கூட
எமக்கு அருகதை 
இல்லையாம் 
காவியுடை தரித்த துறைவி சூலுரைப்பு.

மதிமயங்கிக் கிடந்திடும்
நரைமுடிகள் 
பணம் வாங்கி நடைபிணமாய்
நீதிக்காய் போர் தொடுத்தால்
ஒட்டுக்குழுவென பட்டம்வைப்பு
யார் வந்து என்ன பயன்
நீதி தோற்றபின்.....
-காவலூர் அகிலன்.கிளிநொச்சியிலிருந்து-

Previous Post Next Post