அட்டாளைச்சேனைக்கான தேசியப் பட்டியல் விவகாரத்தில் தலைமையின் முடிவு-மாகாண சபை உறுப்பினர் நஸீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தருவதில் மிக உறுதியாக உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் இன்று (18) அட்டாளைச்சேனை கடற்கரை கோட்டலில் இடம்பெற்றபோதே அவர் அங்கு மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார். இது தொடர்பில் அட்டாளைச்சேனை மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்ற சில முக்கிய பதவியிலுள்ள சிலரை சந்தித்து இவ்விடயம் பற்றி தலைவர் றஊப் ஹக்கீம் சொல்லியுள்ளார். அதற்கான அறிவிப்பையும் மிக விரைவில் வெளியிடவும் உள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் சனிக்கிழமை (07) கட்சியின் வருடாந்த மாநாடு கண்டி பொல்கொல்ல எனும் ஊரில் இடம்பெறவுள்ளது. அந்த மாநாட்டில் அல்லது அதற்கு முன்னர் அட்டாளைச்சேனைக்குரிய அரசியல் அதிகாரத்தைப் பற்றி வெளியிடவுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சியும், கட்சியின் தலைமையும் கொடுத்த வாக்கை கட்டாயம் நிறைவேற்றியாகும் நீங்கள் யாரும் கலக்கமடையவேண்டாம்.

30 ஆண்டுகளாக அட்டாளைச்சேனை பிரதேச மக்களிடத்தில் இருந்து வரும் தாகத்தை கட்சியின் தலைமை மிக வரைவில் நிறைவுசெய்யவுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சி.ஹாரீத், மத்திய குழுவின் ஆலோசகர்களான யூ.எம்.வாஹிட், மு.காவின் ஸ்தாபக செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியமான எஸ்.எம்.ஏ.கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எம்.எல்.கலீல் உள்ளிட்ட மத்திய குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-அபு அலா-
Previous Post Next Post